மயிலாப்பூரில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நவராத்திரி பெருவிழா – மாபெரும் கொலுவுடன் தொடக்கம்
சென்னை மயிலாப்பூரில், இந்து சமய அறநிலையத் துறை ஏற்பாட்டில் நவராத்திரி பெருவிழா செப்டம்பர் 22 முதல் அக்டோபர் 1 வரை 10 நாட்கள் நடைபெறுகிறது. கபாலீஸ்வரர் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலுவுடன் விழா கொண்டாடப்படவுள்ளது.
இது குறித்து துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தர்மத்தை நிலைநாட்டி, அதர்மத்தை அழிக்கும் சக்தி வழிபாட்டின் தத்துவத்தை எடுத்துரைக்கும் நிகழ்வாக நவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. அதன்படி, இவ்வாண்டு மாபெரும் கொலுவுடன் விழா நடைபெறும்” என்று கூறப்பட்டுள்ளது.
ஒவ்வொரு நாளும் மாலை சிறப்பு பூஜைகளும், பக்தி இசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். விழாவின் முதல் நாளான செப்.22-ம் தேதி, சுசித்ரா பாலசுப்பிரமணியத்தின் விநாயகர் அகவல், அபிராமி அந்தாதியுடன் கூடிய பக்தி இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.
அதன்பின் தினமும் பல்வேறு கலை, இசை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அவற்றில் –
- எச்.சூரியநாராயணன், அருணா & அன்பு குழுவினரின் பக்தி இசை
- மாலதி, முத்துசிற்பி & கீர்த்தனாஸ் குழுவினரின் நிகழ்ச்சி
- தேசிய விருது பெற்ற ஆர். காஷ்யப மகேஷ் குழுவினரின் பக்தி இசை
- நாட்டிய சிரோன்மணி உமா தினேஷ் – சாய் முத்ரா நடனக் குழுவின் பரதநாட்டியம்
- ரிஷிப்ரியா குருபிரசாத் குழுவின் இசை நிகழ்ச்சி
- தேச மங்கையர்க்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு
- நிருத்ய நாட்டியாலயா மற்றும் ஸ்ரீஞானமுத்ரா அகாடமியின் பரதநாட்டியம்
- சியாமளா, சஜினி & ரிதம் குழுவின் பக்தி இசை
- வேல்முருகன், சுமதிஸ்ரீ ஆகியோரின் பக்தி களஞ்சியம்
- விநாயகா நாட்டியாலயாவின் பரதம்
- கோபிகா வர்மாவின் மோகினியாட்டம்
- வீரமணி ராஜு குழுவின் பக்தி இசை நிகழ்ச்சி ஆகியவை இடம்பெறவுள்ளன.