திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயிலின் வருடாந்திர பிரம்மோற்சவம் இன்று (செப்டம்பர் 24) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அக்டோபர் 2 வரை நடைபெறும் இந்த விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
இன்று மாலை கோயிலின் தங்க கொடி மரத்தில் கருடன் சின்னம் பொறித்த புனித கொடி ஏற்றப்படும். இதற்காக, கொடி மரத்தைச் சுற்றி அமைக்கப்பட வேண்டிய தர்பைப் புல்கள் மற்றும் பிரம்மோற்சவக் கொடியை கட்டும் புனிதக் கயிறு ஆகியவை, நேற்று தேவஸ்தான ஊழியர்களால் ஊர்வலமாக கொண்டு வந்து அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
பின்னர் அவை பூஜை செய்யப்பட்டு, கோயிலின் ரங்கநாயக மண்டபத்தில் ஆதிசேஷனாகக் கருதப்படும் பெரிய சேஷ வாகனத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
பிரம்மோற்சவம் தொடங்குவதற்கு முன்னதாக, இன்று செவ்வாய்க்கிழமை மாலை, வைகானச ஆகம விதிகளின்படி அங்குரார்ப்பண நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஏழுமலையானின் படைத்தளபதி என அழைக்கப்படும் விஸ்வக்சேனர், ஐதீக முறையின்படி ஆயுதங்களை ஏந்தி, மாடவீதிகளில் உலா வந்து பிரம்மோற்சவ ஏற்பாடுகளை ஆய்வு செய்யும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.