திருப்பதி பிரம்மோற்சவம் 2-ம் நாள்: சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பர் பவனி

திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் 2-ம் நாளான நேற்று காலை, சின்ன சேஷ வாகனத்தில் உற்சவர் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் அளித்தார்.

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவம் புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆந்திர அரசு சார்பில் முதல்வர் சந்திரபாபு நாயுடு, சுவாமிக்கு பட்டு வஸ்திரத்தை காணிக்கையாக வழங்கினார். இதன்பின்னர் சிறப்பு விருந்தினராக குடியரசு துணைத்தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், குடும்பத்தாருடன் வந்து பிரம்மோற்சவ விழாவின் தொடக்க நாளில் கலந்து, இரவு சுவாமியை தரிசித்தார்.

இதனை தொடர்ந்து, ஆதிசேஷனாக கருதப்படும் 7 தலைகள் கொண்ட பெரிய சேஷ வாகனத்தில் தேவி, பூதேவி சமேதமாய் மலையப்பர் 4 மாட வீதிகளில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாய்த்தார். அந்த நேரத்தில் திரளான பக்தர்கள் மாட வீதிகளில் திரண்டு உற்சவ மூர்த்திகளை கண்டு பக்தி பரவசத்தில் “கோவிந்தா… கோவிந்தா…” என கோஷமிட்டனர்.

வாகன சேவையில் பல மாநில கலைஞர்கள் கலந்துகொண்டு மாட வீதிகளில் கலை நிகழ்ச்சிகளை நடத்தினர், இது அனைவரையும் கவர்ந்தது. குறிப்பாக, நேற்று காலை வாசுகியாக கருதப்படும் சின்ன சேஷ வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் வழங்கினார். இரவு அன்ன வாகன சேவையிலும் திரளான பக்தர்கள் கலந்து சுவாமியை வழிபட்டனர்.

Facebook Comments Box