திருப்பதி பிரம்மோற்சவம்: 28 டன் எடையுடன், 32 அடி உயரம் கொண்ட தங்கத் தேர்

திருமலை திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தின் தங்கத் தேர் 28 டன் எடை மற்றும் 32 அடி உயரத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தேர் ஆண்டிற்கு மூன்றே முறை மட்டுமே பக்தர்களுக்கு தரிசனமாக கிடைக்கும்.

திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஆண்டுதோறும் பிரம்மோற்சவத்தை சிறப்பாக நடத்தி வருகிறது. ஒவ்வொரு பிரம்மோற்சவத்தின் 8-வது நாள் காலை நடைபெறும் தேரோட்டத்தில், மலையப்பர் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பிரம்மாண்டமாக வீதியுலா வருவது பாரம்பரியமாக நடைபெறுகிறது. இதனுடன், முன்பு வெள்ளித் தேர் ஒன்றும் இருந்தது. அந்தத் தேரில் உற்சவ மூர்த்திகள் 6-ஆம் நாள் பவனி வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பார்கள்.

ஆனால், வெள்ளித் தேருக்கு அடிக்கடி பழுது பார்க்கும் பணிகள் தேவைப்பட்டதால், அதை மாற்றும் முடிவு எடுக்கப்பட்டது. பின்னர், அதன் மாற்றாக தங்கத் தேர் அமைக்க திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர்கள் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதற்காக தமிழக கைவினைப் பொருள் தயாரிப்பு சங்கத்திற்கு பொறுப்பு வழங்கப்பட்டது. அதன்படி 18 கைவினைக் கலைஞர்கள் திருமலையில் தங்கி இருந்து தேர் வடிவமைப்பு செய்தனர். 28 டன் எடை கொண்ட இந்த தங்கத் தேர் 32 அடி உயரம் உடையது. இதில் 2,900 கிலோ செப்பு தகடுகளில் 74 கிலோ தங்கம் முலாம் பூசப்பட்டுள்ளது. மேலும், 25,000 கிலோ மரம் மற்றும் 18 அங்குலம் செப்பு தகடுகள் 9 அடுக்குகளாக பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதனை உருவாக்குவதற்கு அப்போது ரூ.24.34 கோடி செலவாகியுள்ளது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. 2013 செப்டம்பர் 30-ம் தேதி காலை 9.05 மணிக்கு முதல் முறையாக இந்த தங்கத் தேரோட்டம் நடைபெற்றது. இன்றோடு அதற்கு சரியாக 12 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் பிரம்மோற்சவம், ரத சப்தமி மற்றும் ஆனிவார ஆஸ்தானம் ஆகிய மூன்று விழாக்களில் மட்டுமே இந்த தங்கத் தேர் பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கிறது என்பது சிறப்பு.

Facebook Comments Box