பரமேஸ்வரி திருக்கோலம் | நவராத்திரி வழிபாட்டு சிறப்பு
பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோல்வியுற்றபோது, அவர்கள் வனவாசம் மேற்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது. பின்னர் அஞ்ஞான வாசம் மேற்கொண்ட காலத்தில், தங்கள் ஆயுதங்களை பாதுகாப்பதற்காக வன்னி மரத்தில் உள்ள பொந்திற்குள் மறைத்து வைத்தனர்.
அஞ்ஞான வாசம் முடிந்ததும், ஆயுத பூஜை நாளில் அந்த ஆயுதங்களை எடுத்து வழிபட்டனர். அதோடு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் விரதம் இருந்து வழிபாடு செய்தனர். அந்நாளிலிருந்து இவ்விழாவிற்கு “ஆயுத பூஜை” என்ற பெயர் வந்ததாக ஐதீகம் கூறுகிறது.
பரமேஸ்வரியை வணங்குவதன் மூலம் ஆயுள் வளமும், ஆரோக்கியமும் பெருகும். குழந்தைகள் கல்வி, கலைகளில் சிறந்து விளங்குவர். 10 வயது சிறுமியை சாமுண்டி வடிவில் நவகிரகங்களின் தலைவியாகக் கருதி பூஜிக்க வேண்டும். வசந்தா, காம்போஜி போன்ற ராகங்களில் கீர்த்தனைகள் பாடி, தாமரை, துளசி, மருக்கொழுந்து, வெள்ளை மலர்களால் அர்ச்சனை செய்யலாம்.
நைவேத்தியம்: சர்க்கரை பொங்கல், உளுந்து வடை, வேர்க்கடலை சுண்டல், எள் பாயாசம், கேசரி, பொட்டுக்கடலை, எள் உருண்டை போன்றவற்றில் இயன்றதை சமர்ப்பிக்கலாம்.
கலைகளின் ஆதிபதி சரஸ்வதி தேவி. சரஸ்வதி பூஜை நாளில் வீடுகள், அலுவலகங்கள் அனைத்திலும் பூஜை நடைபெறுவது வழக்கம். மாணவர்கள் தங்கள் புத்தகங்கள், இசைக் கருவிகள், பேனா போன்றவற்றை தேவியின் முன் வைத்து கல்வி அறிவை வேண்டிக் கொள்வர்.
விஜயதசமி சிறப்பு:
தசமி திதியில் ஸ்தூல வடிவில் இருக்கும் அம்பிகையை (விஜயா) வழிபட வேண்டும். அன்றைய தினம் மூன்று சக்திகளும் (இச்சை, கிரியை, ஞானம்) இணைந்து தீய சக்தியை அழித்து அனைவருக்கும் நன்மை அருளும் சுபநாளாகும். அன்றைய தினம் தொடங்கும் எந்த செயலும் வெற்றியடையும் என்று நம்பப்படுகிறது. விஜயதசமி நாளில்தான் ஸ்ரீ ராமர் ராவணனை வென்று வீழ்த்தியதாகவும் கூறப்படுகிறது.