குலசேகரன்பட்டினம் தசரா விழா – மகிஷாசூரசம்ஹாரம், “ஓம் காளி, ஜெய்காளி” முழக்கத்துடன் பக்தர்கள் தரிசனம்
குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் நடைபெற்று வரும் தசரா திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியான மகிஷாசூரசம்ஹாரம் நள்ளிரவு கடற்கரையில் நடைபெற்றது. விரதம் இருந்து வேடம் அணிந்திருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தி பேரர்வத்துடன் தரிசனம் செய்தனர்.
தசரா திருவிழா: இந்தியாவில் கர்நாடக மைசூர் சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு அடுத்தபடியாக, குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் தசரா விழா மிகச் சிறப்பாக நடைபெறுகிறது. இவ்வாண்டு விழா கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காப்பு கட்டி விரதம் இருந்த பக்தர்கள் பல்வேறு வேடங்களில் வீதி தோறும் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி, காணிக்கை வசூலித்தனர்.
தினமும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு அபிஷேகமும், ஆராதனைகளும் நடைபெற்றன. இரவு 10 மணிக்கு அம்மன் பல்வேறு திருக்கோலங்களில், வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து அருள்பாலித்தார்.
மகிஷாசூரசம்ஹாரம்: திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மகிஷாசூர வதம் நள்ளிரவு கடற்கரையில் நடந்தது. மாலை முதலே பக்தர்கள் பல்வேறு வாகனங்களில் குலசேகரன்பட்டினம் வந்தனர். பக்தர்களும் தசரா குழுவினரும் செல்ல தனிப் பாதைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. நகர புறவழிச்சாலைகள் வாகனங்களால் நிரம்பின.
விழாவின் 10ம் நாளில் காலை 6 மணிக்கும், 8 மணிக்கும் சிறப்பு அபிஷேகம், 10.30க்கு மகா அபிஷேகம், இரவு 11 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து நள்ளிரவு சிம்மவாகனத்தில் அம்மன் கடற்கரையில் சிதம்பரரேஸ்வரர் கோயில் முன்பு எழுந்தருளி, மகிஷாசூரனை வதம் செய்தார்.
அப்போது லட்சக்கணக்கான பக்தர்கள் “தாயே முத்தாரம்மா”, “ஓம் காளி, ஜெய்காளி”, “வெற்றி அம்மனுக்கே” என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர். பின்னர் கோயில், கடற்கரை மேடை, அபிஷேக மேடை, கலையரங்கம் ஆகிய இடங்களில் சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.
நாளை நிறைவு: நாளை (அக்.3) காலை 6 மணிக்கு அம்மன் பூஞ்சப் பரத்தில் வீதியுலா புறப்பட்டு, மாலை 4 மணிக்கு கோயிலை அடைந்தவுடன் பக்தர்கள் காப்பு அவிழ்த்து விரதத்தை நிறைவு செய்கின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு சேர்க்கை அபிஷேகம் நடைபெறும்.
விழாவை முன்னிட்டு தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் ஏற்பாடுகளை பார்வையிட்டார். நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் தலைமையில் 3,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.