அரியலூர் கோதண்ட ராமசாமி கோயில் தேரோட்ட விழாவில் பலர் பங்கேற்பு
அரியலூரில், இந்து சமய அறநிலையத் துறை கண்காணிப்பில் உள்ள ஆலந்துறையார் கோதண்ட ராமசாமி கோயிலில் 82 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்ட விழா நடைபெற்றது.
தேரோட்டத்திற்காக இந்து சமய அறநிலையத் துறை ரூ.15.50 லட்சம் மற்றும் பொதுமக்கள் ரூ.3.10 லட்சம் நிதியளித்து, மொத்த ரூ.18.60 லட்சம் மதிப்பில் புதிய தேர் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேரோட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டு, தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தேரோட்ட விழா செப்.23-ம் தேதி கோயிலில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ச்சியாக இரவு நேரங்களில் பல்வேறு வாகனங்களில் பெருமாள் எழுந்தருளும் வீதியுலா நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று (அக்.2) காலை நடைபெற்றது.
தேரில், போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர், அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரத்தினசாமி, எம்எல்ஏ சின்னப்பா ஆகியோர் பொதுமக்களுடன் சேர்ந்து தேரை இழுத்தனர். தேரோட்டம் தேரடி பகுதியில் இருந்து புறப்பட்டு, மாதா கோயில் மற்றும் சத்திரம் வழியாக மீண்டும் தேரடிக்கு திரும்பி வந்தது.
தேரில் ஆண்டாள், அலமேலுமங்கை உடன் பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். விழாவில் கோயில் செயல் அலுவலர் சரவணன், ஆய்வாளர் சதீஸ்குமார், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலை வாணன், கோட்டாட்சியர் பிரேமி, வட்டாட்சியர் முத்து லெட்சுமி மற்றும் பொதுமக்கள், பக்தர்கள் திரளாக கலந்து சாமி தரிசனம் செய்தனர்.