ஏழுமலையானுக்கு அனைவரும் சமம்: தேரின் உச்சியில் சவர தொழிலாளர்களின் தங்க குடை அலங்காரம்

மனிதர்களிடையே தான் ஜாதி, மதம் போன்ற வேறுபாடுகள் இருக்கலாம் — ஆனால் கடவுளுக்கு அவை இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது திருப்பதி ஏழுமலையானின் சேவை மரபுகள். இன்று நடைபெறும் பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வாக, காலை தேர்த்திருவிழாவில் சவர தொழிலாளர்கள் வழங்கிய தங்க குடை தேரின் உச்சியில் அமைக்கப்படுகிறது. அந்த குடையின் கீழ் உற்சவ மூர்த்திகள் பக்தர்களுக்கு அருள்பாலித்து வலம் வருவது பாரம்பரியமாக தொடர்கிறது.

திருப்பதி ஏழுமலையானின் தினசரி கைங்கர்யங்களில் பார்ப்போம் எனில், ஜாதி, மதம் என்பவை பெருமாளுக்கு பொருந்தாதவை என்பதை உணர முடியும். பல ஆண்டுகளாக, கோயில் காலை திறக்கும் நேரத்தில் நடைபெறும் சுப்ரபாத சேவைக்கு முன் தரிசன உரிமை யாதவ குலத்தவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதேபோல், இரவு நடை சாத்தப்படுவதற்கு முன் நடைபெறும் ஏகாந்த சேவையின் போது, கடைசியாக நாவிதர் சமூகத்தினரின் நாதஸ்வர இசை ஒலிக்கிறது. அதன் பின்னரே பெருமாள் துயில் பெறுகிறார்.

ஒவ்வொரு செவ்வாய்கிழமையிலும் நடைபெறும் அஷ்டதள பாத பத்மாராதனை சேவையில், குண்டூரைச் சேர்ந்த ஷேக் மஸ்தான் எனும் பக்தர் 1984ம் ஆண்டு முதல் வழங்கி வரும் 108 தங்க புஷ்பங்கள் பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

அதேபோல், தீபாவளி ஆஸ்தானம் குயவர்கள் தயாரிக்கும் மண் சட்டியில் நடைபெறுகிறது. மேலும், பழங்குடி இனத்தவர்களின் குலதெய்வமாகக் கருதப்படும் ஹத்திராம் பாபா மடம் சார்பில் இன்று வரை சுப்ரபாத சேவையில் வெண்ணை நைவேத்தியம் வழங்கப்படுகிறது.

இவ்வாறு பல சமூகங்கள், பிரிவினர்கள் மற்றும் இனத்தவர்கள் தங்கள் பங்களிப்புகளால் ஏழுமலையானின் சேவை மரபில் பங்கு கொண்டு வருகின்றனர்.

இன்றைய தேர்த்திருவிழாவிலும், திருமலையில் முடி காணிக்கை மண்டபத்தில் பணியாற்றும் சவர தொழிலாளர்கள் வழங்கும் தங்க குடை தேரின் உச்சியில் அமைக்கப்படுகிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு மரக்கட்டையில் குடை செய்யப்பட்டு வழங்கப்பட்டாலும், கடந்த 40 ஆண்டுகளாக தங்க குடைதான் தேரில் பயன்படுத்தப்படுகிறது.

பந்துலுகாரி வம்சத்தினர் சார்பில் ஸ்ரீ கிருஷ்ணதேவராயர் காலத்திலிருந்தே இந்த தங்க குடை வழங்கப்பட்டு வருகிறது என்ற ஐதீகம் நிலவுகிறது. நேற்று மாலை தங்க குடைக்கு கல்யாண கட்டா மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பின்னர், சவர தொழிலாளர்கள் அந்த குடையை ஊர்வலமாக எடுத்துச் சென்று, அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இன்று நடைபெறும் தேர்த்திருவிழாவில் அந்த தங்க குடை தேரின் உச்சியில் பிரத்யேகமாக அலங்கரிக்கப்பட உள்ளது என்பது சிறப்பு.

Facebook Comments Box