திருப்பதி பிரம்மோற்சவம் ஏழாம் நாள்: சூரிய, சந்திர பிரபை வாகனங்களில் மலையப்பர் அருள்பாலித்தார்

திருமலை ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் பிரம்மோற்சவ விழாவின் ஏழாவது நாளான நேற்று, காலை சூரிய பிரபை வாகனத்திலும் இரவு சந்திர பிரபை வாகனத்திலும் உற்சவரான மலையப்பர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

கடந்த மாதம் 24 ஆம் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய பிரம்மோற்சவம் மிகுந்த சிறப்புடன் நடைபெற்று வருகிறது. அன்றைய தினம் ஆந்திரா மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் பட்டு வாஸ்திரங்களை சுவாமிக்கு சமர்ப்பித்தார். அதே இரவு பெரிய சேஷ வாகனத்தில் மலையப்பர் வீதி உலா வருகையால் வாகன சேவைகள் தொடங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து கடந்த ஆறு நாட்களாக சின்ன சேஷ வாகனம், அன்ன வாகனம், சிம்ம வாகனம், முத்துப் பல்லக்கு, கற்பக விருட்சம், சர்வ பூபால வாகனம், மோகினி அலங்காரம், கருட சேவை, அனுமன் வாகனம், தங்கரதம் மற்றும் கஜ வாகனம் என ஒவ்வொரு நாளும் மலையப்பர் பவனி வந்து பக்தர்களுக்கு திருக்காட்சி அளித்தார்.

ஏழாம் நாளான நேற்று காலை, சூரிய நாராயணர் அலங்காரத்தில் சூரிய பிரபை வாகனத்தில் மலையப்பர் எழுந்தருளினார். இதில் ஆந்திரா, தெலங்கானா, தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து வந்த 452 நடனக் கலைஞர்கள் மாடவீதிகளில் நடனமாடி அனைவரையும் கவர்ந்தனர்.

இதைத் தொடர்ந்து இரவில் சந்திர பிரபை வாகனத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அலங்காரத்தில் மலையப்பர் எழுந்தருளி, நான்கு மாடவீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இந்நிகழ்வில் ஜீயர் சுவாமிகள், தேவஸ்தான அதிகாரிகள், அர்ச்சகர்கள், நடனக் குழுக்கள் மற்றும் பெரும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இன்று பிரம்மோற்சவத்தின் எட்டாம் நாளாகும். காலை 7 மணிக்கு ஏழுமலையான் கோயிலின் முன்னால் தேரோட்டம் நடைபெற உள்ளது. இதில் நேர்த்திக்கடன் செலுத்த பல பக்தர்கள் பங்கேற்கவுள்ளனர். இரவு குதிரை வாகனத்தில் மலையப்பர் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். நாளை காலை தெப்பக்குளத்தில் சக்கர ஸ்நானம் நடைபெறவுள்ளது. மாலை கொடி இறக்க நிகழ்ச்சியுடன் பிரம்மோற்சவம் நிறைவடையும்.

Facebook Comments Box