திருவல்லிக்கேணி அஹோபில மடத்தில் சுவாமி தேசிகன் தேரோட்டம் கோலாகலம்
திருவல்லிக்கேணி அஹோபில மடத்தில் சுவாமி தேசிகன் உற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் கடந்த 28-ம் தேதி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
திருவல்லிக்கேணி தேரடி தெருவில் உள்ள அஹோபில மடத்தின் முதல் ஜீயர் ஸ்ரீமத் ஆதிவண் சடகோப யதீந்திரமகா தேசிகன் நினைவாக ஆண்டு தோறும் உற்சவ விழா நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு உற்சவம் கடந்த மாதம் 19-ம் தேதி தொடங்கியது. இந்த வருடம் புதிய திருத்தேர் ஏற்பாடு செய்யப்பட்டு, முதல்முறையாக தேரோட்டம் நடந்தது. நிகழ்வில் அஹோபில மடத்தின் 46-வது பட்டத்து அழகிய சிங்கர் ஸ்ரீமதே ஸ்ரீவண் சடகோப ஸ்ரீரங்கநாத யதீந்திர மஹா தேசிகன் பக்தர்களுக்கு ஆசி வழங்கினார்.
அவதார திருநாளை முன்னிட்டு, சுவாமி தேசிகன் உற்சவம் அக்.2-ம் தேதி தொடங்கி 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. அக்.2 முதல் 8-ம் தேதி வரை, பல்லக்கு சேவை, கேடயம், சிம்ம வாகனம், சூரிய பிரபை, சந்திர பிரபை, ஹம்ச வாகனம், யானை வாகனம், யாளி வாகனம், குதிரை வாகனத்தில் வீதி உலா போன்ற நிகழ்வுகள் நடைபெற்றன.
தேரோட்டம் நிகழ்வு காலை 7 மணிக்கு தொடங்கியது. திருத்தேரில் சுவாமி தேசிகன் எழுந்தருளினார். தேர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் இருந்து புறப்பட்டது. பக்தர்கள் தேர் சக்கரத்தை பிடித்து 4 மாட வீதிகளில் இழுத்தனர். இந்த நிகழ்வில் திரளானோர் சுவாமியை தரிசனம் செய்து வழிபட்டனர்.
தேர் 2 மணி நேரத்தில் இலக்கில் வந்து அடைந்தது. அதன் பிறகு மாலையில் திருமஞ்சனம் நடைபெற்றது. விழாவில் பக்தர்கள் அதிகளவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அக்.14-ம் தேதி விடையாற்றி உற்சவம் நடைபெற உள்ளது. இந்நிலையில், இன்று மங்களாஸாசனம் மற்றும் மங்களகிரி நிகழ்வுகள் நடைபெறுகின்றன.