இங்கிலாந்து U-19 அணிக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட இளையோர் ஒருநாள் தொடரில், இந்தியா U-19 அணி 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது. இந்த தொடரின் முக்கியமான முகமாக வெடித்துத் தோன்றியவர் வைபவ் சூர்யவன்ஷி. அவர் அரைசதங்களும் ஒரு சதமும் அடித்ததுடன், மொத்தமாக 355 ரன்களை குவித்தார். அவர் பெற்ற சராசரி மற்றும் ஸ்ட்ரைக் ரேட் ஆகியவை இளையோர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் புதிய உச்சங்களை நிலைநிறுத்தியுள்ளன.
2025ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடரில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்திய 14 வயது சிறுவன் வைபவ் சூர்யவன்ஷி, ஒரே கட்டத்தில் விளையாடும் வீரர் மட்டுமன்றி, உலக அளவிலும் தன்னை நிரூபிக்கக்கூடிய ஆற்றல் மிக்க வீரராக இருக்கிறான் என்பதை இந்த தொடரின் மூலம் தெளிவாகக் காட்டியுள்ளார்.
இந்திய இளையோர் அணியை ஆயுஷ் மாத்ரே வழிநடத்த, இங்கிலாந்து இளையோர் அணியை 3-2 என முந்தி தொடரை கைப்பற்றியது. அந்த வெற்றியின் பின்னணியில் வலுவான பங்களிப்பு அளித்தவர் சூர்யவன்ஷி. ஐந்து போட்டிகளில் அவர் 71 என்ற சராசரி மற்றும் 174.01 என்ற அதிவேக ஸ்ட்ரைக் ரேட்டுடன் 355 ரன்களை பெற்றுள்ளார். இது இருதரப்பு இளையோர் ஒருநாள் போட்டிகளில் காணப்பட்ட மிக உயர்ந்த ஓட்ட எண்ணிக்கையாகும். தொடக்க வீரர்களில் அவர் குவித்துள்ள ரன்கள், வரலாற்றில் இரண்டாவது அதிகபட்சமாகும்.
முக்கியமானது என்னவெனில், ஒரு தொடரில் 300 ரன்களுக்கும் அதிகமாக, 174 என்ற அபூர்வமான ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவித்ததன் மூலம், சூர்யவன்ஷி ஒரு தனித்த அடையாளத்தை உருவாக்கியுள்ளார். இதற்கு முன்னர், வங்கதேசத்தின் தவ்ஹித் ஹிருதய் மட்டும் 300 ரன்கள் கடந்திருந்தாலும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 114.62 மட்டுமே என்பதைக் குறிப்பிட வேண்டியது அவசியம்.
அதுமட்டுமின்றி, நான்காவது போட்டியில் சூர்யவன்ஷி 52 பந்துகளில் சதத்தை அடித்து, இளையோர் ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிவேக சதம் அடித்த வீரராகப் பெயர் பெற்றார். அவர் 78 பந்துகளில் 143 ரன்கள் குவித்து 183.33 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியது, பாகிஸ்தானின் கம்ரான் குமல் 2013இல் இங்கிலாந்துக்கு எதிராக 66 பந்துகளில் 102 ரன்கள் எடுத்த 182.14 ஸ்ட்ரைக் ரேட் சாதனையை முறியடித்துள்ளது.
அதேபோல், மூன்றாவது போட்டியில் அவர் 31 பந்துகளில் 86 ரன்கள் விளாசி, 277.41 என்ற அதிரடி ஸ்ட்ரைக் ரேட்டில் ஆடியதன் மூலம், இளையோர் ஒருநாள் வரலாற்றில் 80 ரன்களை மிக விரைவாக எடுத்த வீரராகக் விளங்கியுள்ளார். இதனால், 2004ல் ஸ்காட்லாந்துக்கு எதிராக 38 பந்துகளில் 90 ரன்கள் எடுத்த சுரேஷ் ரெய்னாவின் சாதனையை தாண்டினார். ரெய்னாவின் ஸ்ட்ரைக் ரேட் அப்போது 236.84 ஆக இருந்தது.
இத்தனை சிறப்பான சாதனைகள் வைபவ் சூர்யவன்ஷியை, வெறும் இளையோர் கிரிக்கெட் மட்டுமல்லாமல், விரைவில் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணிகளிலும் வாய்ப்பு பெறக்கூடிய அடுத்த தலைமுறை வீரராக திகழ வைக்கின்றன.