இந்திய அணியில் பல தரமான பேட்ஸ்மேன்கள் இருந்தும், லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் வெற்றியைச் சுலபமாக எட்ட முடியாமல் போனது மிகவும் ஏமாற்றமாக உள்ளது என்று முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.
ஜேம்ஸ் ஆண்டர்சன்-சச்சின் டெண்டுல்கர் டிராபி டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணி 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. போட்டியின் இறுதிநேரங்களில் ஜடேஜா, பும்ரா, சிராஜ் உள்ளிட்டவர்கள் கடும் எதிர்ப்பை அளித்த போதும், வெற்றியின் உச்சிக்கட்டில் இந்தியா தோல்வியைச் சந்தித்தது.
இந்த தோல்வியைத் தொடர்ந்து, இந்தியாவின் பேட்டிங் குறித்து சவுரவ் கங்குலி தனது கருத்துகளை பகிர்ந்துள்ளார்.
“இந்தியாவின் இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டம் என் பார்வையில் மிகுந்த ஏமாற்றம் அளித்தது. 190க்கும் மேற்பட்ட ரன்கள் இலக்காக இருந்தபோதும், இந்த தரமான இந்திய அணிக்கு அந்த இலக்கை எட்ட முடியாதது மிகுந்த கவலையை ஏற்படுத்தியது. ஜடேஜா போராடி ரன்கள் சேர்த்ததைப் பார்த்தபோது, நானும், இந்திய அணியில் உள்ள மற்ற முக்கியமான பேட்ஸ்மேன்களும் ஏமாற்றமடைந்திருப்போம்.
இது இந்திய அணிக்கு 2-1 என்ற முன்னிலை கொடுக்கும் வாய்ப்பு இருந்தது. முக்கியமான டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் சற்றே பொறுமையாக ஆடி இருந்தால் இந்தப் போட்டியின் முடிவு மாறி வெற்றி இந்தியாவுக்கே சென்றிருக்கும்.
ஜடேஜா மிக சிறப்பாக ஆடியார். அவர் தொடர்ந்து இந்திய அணிக்காக விளையாட வேண்டிய ஒரு முக்கியமான வீரர். கடந்த காலங்களை விட அவரது பேட்டிங் திறன் வளர்ந்துள்ளது. அவர் ஏற்கனவே 80க்கும் மேற்பட்ட டெஸ்ட் போட்டிகளிலும், 200 ஒருநாள் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். பேட்டிங், பவுலிங், பீல்டிங் என மூன்றிலும் மெருகூட்டிய திறமை கொண்டவர். அவர் ஒரு மிக சிறப்பு மிக்க ஆல் ரவுண்டர்” என கங்குலி கூறியுள்ளார்.