சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்பு

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் தொடரில் அர்ஜுன் எரிகைசி உள்ளிட்ட முக்கிய வீரர்கள் பங்கேற்பு

இந்தியாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கிளாசிக்கல் சதுரங்க போட்டிகளில் ஒன்றான ‘குவாண்ட்பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ்’ போட்டியின் 3-வது பதிப்பு, ஆகஸ்ட் 6 முதல் 15 வரை, சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டலில் நடைபெற உள்ளது. இந்த ஆண்டில் போட்டியில் பங்கேற்கும் வீரர்களின் எண்ணிக்கையும், பரிசுத்தொகையும் அதிகரிக்கப்பட்டுள்ளன. பரிசுத் தொகை ரூ.1 கோடி ஆக உயர்ந்துள்ளது.

மாஸ்டர்ஸ் பிரிவில், நெதர்லாந்தைச் சேர்ந்த அனிஷ் கிரி, இந்திய வீரர்கள் அர்ஜுன் எரிகைசி, விதித் குஜராத்தி, நிஹால் சரின், நெதர்லாந்தின் ஜோர்டன் வான் ஃபாரெஸ்ட், அமெரிக்காவின் லியாங் அவோன்டர் மற்றும் ரே ராப்சன், ஜெர்மனியின் வின்சென்ட் கீமர், ரஷ்ய வீரர் விளாடிமிர் ஃபெடோசீவ், 2024 சேலஞ்சர்ஸ் பிரிவில் வெற்றி பெற்ற இந்தியாவின் வி. பிரணவ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

போட்டியை நேரில் காண விரும்புவோர் புக்மைஷோ இணையதளம் வாயிலாக டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம். பொதுப்பிரிவு டிக்கெட்டுகள் ரூ.750 முதல், விஐபி டிக்கெட்கள் ரூ.3,500 வரை விலையில் உள்ளன.

சேலஞ்சர்ஸ் பிரிவில், இந்திய வீரர்கள் கார்த்திகேயன் முரளி, லியோன் மென்டோன்சா, ஆர். வைஷாலி, ஹரிகா துரோணவள்ளி, அபிமன்யு புராணிக், ஆர்யன் சோப்ரா, அதிபன் பாஸ்கரன், பி. இனியன், தீப்தயன் கோஷ், எம். பிரனேஷ் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மாஸ்டர்ஸ் பிரிவில் முதலிடம் பிடிக்கும் வீரருக்கு ரூ.25 லட்சம், இரண்டாம் இடத்திற்கு ரூ.15 லட்சம், மூன்றாவது இடத்திற்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும். சேலஞ்சர்ஸ் பிரிவில் முதலிடம் பெறுபவர் ரூ.7 லட்சம் மற்றும் 2026 மாஸ்டர்ஸ் போட்டியில் பங்கேற்பதற்கான வாய்ப்பையும் பெறுவார்.

மாஸ்டர்ஸ் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்வோர் 24.5 ஃபிடே சர்க்யூட் புள்ளிகள் பெறுவர். இது 2026-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கேண்டிடேட்ஸ் சதுரங்கத் தொடருக்கு தகுதி பெறுவதற்கான முக்கிய அடிப்படை ஆகும். கூட்டு வெற்றியாளர்கள் ஏற்பட்டால் தலா 22.3 புள்ளிகள், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களுக்கு 17.8 மற்றும் 15.6 புள்ளிகள் வழங்கப்படும்.

Facebook Comments Box