ஜோ ரூட் சதமடித்தார்: இங்கிலாந்து அணியின் ரன் மழை!

ஜோ ரூட் சதமடித்தார்: இங்கிலாந்து அணியின் ரன் மழை!

இந்திய அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 500 ரன்கள் மேல் குவித்துள்ளது. ஜோ ரூட் சதமடித்து ஜொலித்தார்.

மான்செஸ்டர் ஒல்டு டிராஃபோர்டு மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில், இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 358 ரன்களுக்கு அவுட் ஆனது. இதில் சாய் சுதர்சன் 61, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 58, ரிஷப் பந்த் 54 ரன்கள் எடுத்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் பென் ஸ்டோக்ஸ் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

அதையடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி, இரண்டாவது நாளை முடிக்கும் போது 46 ஓவர்களில் 2 விக்கெட்கள் இழப்புக்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. ஸாக் கிராவ்லி 84, பென் டக்கெட் 94 ரன்கள் எடுத்தனர். ஆலி போப் 20, ஜோ ரூட் 11 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் விளையாடினர்.

நேற்று மூன்றாவது நாள் தொடங்கியபோது, ஆலி போப் 128 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 71 ரன்கள் எடுத்துவிட்டு வாஷிங்டன் சுந்தரின் பந்தில் கே.எல்.ராகுலிடம் கைவசப்படினார். ஆலி போப் – ஜோ ரூட் ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 144 ரன்கள் சேர்த்தது. பின்னர் ஹாரி புரூக் 3 ரன்களில் சுந்தரின் பந்தில் ஸ்டம்பிங்காகிவிட்டார்.

அதன்பின் ஜோ ரூட்டுடன் இணைந்த ஸ்டோக்ஸ், நல்ல கூட்டணியை அமைத்தார். இங்கிலாந்து 87வது ஓவரில் 358 ரன்களை கடந்தது. ஜோ ரூட் 178 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் தனது 38வது சதத்தை பதித்தார். இதன்மூலம், டெஸ்ட் போட்டிகளில் அதிக சதங்கள் எடுத்தவர்களில் இலங்கையின் சங்கக்காராவின் சாதனையை (38 சதங்கள்) ஜோ ரூட் சமன் செய்தார்.

மேலும், இந்தியாவுக்கு எதிராக ரூட் இதுவரை அடித்த 12வது சதமாக இது அமைந்தது. இத்துறையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்தை (11 சதங்கள்) அவர் மிஞ்சினார். தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 102 ஓவர்களில் 4 விக்கெட்களுக்கு 433 ரன்கள் எடுத்திருந்தது. ரூட் 120, ஸ்டோக்ஸ் 36 ரன்களில் இருந்தனர்.

இடைவேளைக்குப் பின் ஸ்டோக்ஸ் அரைசதத்தை கடந்தார். அவர் 116 பந்துகளில் 66 ரன்கள் எடுத்த பின் தசை சிரங்கல் காரணமாக ரிட்டயர்டு ஹர்ட்டாக வெளியேறினார். பின்னர் ஜேமி ஸ்மித் களத்தில் வந்தார்.

மறுபுறம் ஜோ ரூட் 150 ரன்கள் எடுத்த பின் ஜடேஜா பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் ஜுரேல் ஸ்டம்பிங் செய்தார். ஜேமி ஸ்மித் 9, வோக்ஸ் 4 ரன்களில் ஆட்டமிழந்தனர். பின்னர் ஸ்டோக்ஸ் மீண்டும் பேட் செய்ய வந்தார்.

மூன்றாவது நாள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்கள் இழப்புக்கு 544 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் இந்திய அணியை விட 186 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஸ்டோக்ஸ் 77, டாவ்சன் 21 ரன்களுடன் களத்தில் உள்ளனர். இந்தப் போட்டியை டிரா செய்ய முயற்சிக்கவேண்டும் என முன்னாள் இந்திய வீரர் மனோஜ் திவாரி பரிந்துரைத்துள்ளார்.

23 ரன்களில் அதிர்ஷ்டவசமாக தப்பிய ரூட்:

இங்கிலாந்து அணியின் ரூட் 23 ரன்களில் இருந்தபோது ரன் அவுட் ஆகும் அபாயத்தில் இருந்து தப்பினார். அவர் அடித்த பந்தை பீல்டர் தடுத்ததும், ஜடேஜா பந்தை பிடித்து நான்-ஸ்ட்ரைக்கர் எண்டுக்குத் துரத்தியதும் நிகழ்ந்தது. ஆனால் குறி தவறியதால், அந்த பந்தை பிடிக்க யாரும் இல்லாததால் ரூட் அவுட் ஆகாமல் தப்பினார். இதை ரூட் சரியாக பயன்படுத்தினார்.

ரன் குவிப்பில் இரண்டாம் இடம்:

ஜோ ரூட் 120 ரன்களை கடந்தபோது, டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிக்கி பாண்டிங்கை (13,378 ரன்கள்) மிஞ்சி 13,379 ரன்கள் எடுத்துள்ளார். இவ்வகையில் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே (15,921 ரன்கள்) அவருக்கு மேலாக உள்ளார்.

Facebook Comments Box