“ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய மைதானங்கள் பேட்டிங்குக்கு ஏற்றதாக இருக்காது” – இங்கிலாந்துக்கு ஸ்டீவ் ஸ்மித்தின் எச்சரிக்கை
ஆஷஸ் தொடரில் ஆஸ்திரேலிய மைதானங்கள் பேட்டிங் நடத்தைக்கு உகந்ததாக இருக்க வாய்ப்பில்லை என, இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்களுக்கு ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஆண்டர்சன் – சச்சின் டிராபி தொடரில், இங்கிலாந்து மைதானங்கள் அதிக ரன்கள் குவிக்க உகந்த, தட்டையான நிலையில் இருந்ததென விமர்சனங்கள் எழுந்தன. இதையே ஸ்மித்தும் ஒப்புக்கொண்டார்.
“ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஆஷஸ் போட்டிகளில் இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் கடுமையான சவால்களை எதிர்கொள்ள நேரிடும். அவர்கள் கடந்த சில வருடங்களாக இங்கிலாந்தில் ரன்கள் அடிக்க ஏதுவான சீரான மேடைகளில் விளையாடி வருகின்றனர். ஆனால் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில், டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு ரன்கள் குவிக்கும்போது கடுமையான சிரமங்கள் ஏற்படுகின்றன. கடந்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக இந்த நிலைமை தொடர்கிறது,” என ஸ்மித் கூறினார்.
“ஒலிம்பிக் தொடருக்கான வாய்ப்பை குறிவைத்து ஃப்ரான்சைஸ் கிரிக்கெட்டில் அதிகமாக பங்கேற்று வருகிறேன். இதனால்தான் ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற முடிவெடுத்தேன்,” என்றும் அவர் விளக்கினார்.
தற்போது, ‘தி ஹன்ட்ரட்’ கிரிக்கெட் லீக்கில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் இருக்கிறார் ஸ்மித். ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான ஆஷஸ் போட்டிகள் இந்தாண்டு நவம்பரில் தொடங்கவுள்ளன.