ஓவல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு: இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்தது

ஓவல் டெஸ்ட் போட்டி மழையால் பாதிப்பு: இந்திய அணி 6 விக்கெட்டுக்கு 204 ரன்கள் சேர்த்தது

இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் இறுதி மற்றும் 5வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையின் காரணமாக பாதிக்கப்பட்டது.

லண்டனில் உள்ள கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று துவங்கிய இந்த டெஸ்டில், நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணித் தலைவர் ஆலி போப் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணிகளிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. இந்திய அணியில் ரிஷப் பந்த், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரீத் பும்ரா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் விலக்கப்பட்டு, துருவ் ஜூரேல், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகியோர் இணைக்கப்பட்டனர்.

தொடக்கமாக களமிறங்கிய இந்திய அணிக்கு சற்று அதிர்ச்சி காத்திருந்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் 9 பந்துகளில் 2 ரன்கள் எடுத்தபோது கஸ் அட்கின்சனின் பந்தில் எல்பிடபிள்யூவாக வெளியேறினார். முதலில் ஔட் என அறிவிக்கப்படவில்லை; இங்கிலாந்து அணி மேல்முறையீடு செய்ததில் பந்து ஸ்டம்ப்களை இடிக்கும் என உறுதி செய்யப்பட்டதால் ஜெய்ஸ்வால் வெளியேறினார்.

அதன்பின் களமிறங்கிய சாய் சுதர்சன், கே.எல்.ராகுலுடன் இணைந்து நிதானமாக விளையாடினார். கே.எல்.ராகுல் 40 பந்துகளில் ஒரு பவுண்டரியுடன் 14 ரன்கள் எடுத்த நிலையில், கிறிஸ் வோக்ஸின் பந்தில் கிளீன் போல்டானார். ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வீசப்பட்ட பவுன்ஸான பந்தை ராகுல் கட் செய்ய முயன்றபோது, பந்து மட்டை உள்விளிம்பில் பட்டு நேராக ஸ்டம்பை தாக்கியது.

38 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்த நிலையில், கேப்டன் ஷுப்மன் கில் களமிறங்கினார். இந்திய அணி 23 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 72 ரன்கள் எடுத்திருந்தபோது மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. பின்னர் மதிய உணவு இடைவேளை அறிவிக்கப்பட்டது. ஆனால் மைதானம் ஈரமடைவதால் விளையாட்டு தாமதமாகத் தொடங்கப்பட்டது.

அப்போது கில் 15 ரன்களுடன், சுதர்சன் 25 ரன்களுடன் களத்தில் இருந்தனர். சுமார் 2 மணி நேரத்திற்குப் பிறகு, மைதானம் உலர்த்தப்பட்ட நிலையில், ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது.

கில் 35 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்த நிலையில் ரன் அவுட்டானார். கஸ் அட்கின்சனின் பந்தில் ஷாட் விளையாடிய கில் ஓட முற்பட்ட நிலையில் எதிர்ப்பக்கம் இருந்த சாய் சுதர்சன் ஓட மறுத்தார். திரும்ப முயன்ற கிலுக்கு அட்கின்சன் பந்து எடுத்து ஸ்டம்பை இடையுறையின்றி வீழ்த்தினார்.

இந்த ரன் அவுட் காட்சியை பார்வையிட்ட பயிற்சியாளர் கவுதம் கம்பீர் நெருக்கடியாக மாறினார். அதன்பின்னர் கருண் நாயர் களமிறங்கினார். இந்திய அணி 29 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 85 ரன்கள் எடுத்தபோது மழை மீண்டும் தடை செய்தது. அப்போது சாய் சுதர்சன் 84 பந்துகளில் 28 ரன்கள், கருண் நாயர் 8 பந்துகளில் ரன் எதுவும் இல்லாமல் விளையாடிக் கொண்டிருந்தனர்.

பின்னர் சாய் சுதர்சன் 108 பந்துகளில் 38 ரன்கள் எடுத்த நிலையில் ஜாஷ் டங் பந்தில் அவுட்டானார். ஜடேஜா 9 ரன்களில் டங் பந்தில் வெளியேறினார். தொடரில் முதன்முறையாக விளையாடிய துருவ் ஜூரேல் 19 ரன்களில் அட்கின்சனின் பந்தில் அவுட்டானார்.

முதல் நாள் முடிவில் இந்திய அணி 64 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழந்து 204 ரன்கள் எடுத்திருந்தது.

கருண் நாயர் 52 ரன்களுடன், வாஷிங்டன் சுந்தர் 19 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.

கவாஸ்கர் சாதனை முறியடிப்பு:

இந்த தொடரின் கடைசி டெஸ்ட் போட்டியில் ஷுப்மன் கில் 21 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் அவர் 11 ரன்கள் எடுத்தபோது, இந்திய அணியின் கேப்டனாக ஒரே தொடரில் அதிக ரன்கள் எடுத்த சாதனையை நிலைநாட்டினார்.

இதற்கு முன் சுனில் கவாஸ்கர் 1978-79 இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 732 ரன்கள் எடுத்த சாதனையை படைத்திருந்தார். தற்போது ஷுப்மன் கில் 743 ரன்கள் எடுத்து அந்த சாதனையை முறியடித்துள்ளார்.

ஐந்தாவது முறையாக டாஸ் இழப்பு:

இந்த தொடரில் ஐந்து போட்டிகளிலும் ஷுப்மன் கில் டாஸில் தோல்வியடைந்துள்ளார். ஒரே தொடரில் 5 போட்டிகளுக்கும் டாஸ் இழப்பது 14-வது முறை. இதில் 13 தொடரில் 3 தொடர்கள் டிரா ஆகியிருந்தன. 1953-ம் ஆண்டு ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து அனைத்து போட்டிகளிலும் டாஸ் இழந்தும் தொடரை வென்ற அனுபவம் உண்டு.

Facebook Comments Box