“மீண்டும் முயற்சி செய்கிறேன்” – விவாகரத்து முடிவை மாற்றிய சாய்னா நேவால்!
இந்தியாவின் பிரபல பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால் மற்றும் அவருடைய கணவராக இருக்கும் முன்னாள் பேட்மின்டன் வீரர் பருபள்ளி காஷ்யப் சில நாட்களுக்கு முன் தங்கள் திருமண வாழ்க்கையிலிருந்து விலக உள்ளதாக அறிவித்திருந்தனர்.
“நாங்கள் இருவரும் மிகவும் யோசித்த பிறகே இந்த முடிவை எடுத்துள்ளோம். நம் இருவரின் வளர்ச்சிக்கும் மன அமைதிக்கும் இது சிறந்தது என்று கருதி, பரஸ்பர சம்மதத்துடன் இந்த முடிவை எடுத்தோம். எதிர்காலம் நமக்குத் துணையாக இருக்கும் என நம்புகிறேன்” என சாய்னா தனது சமூக ஊடக பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், பிரிவை அறிவித்த 19 நாட்கள் கடந்தவுடன், தனது முடிவை மாற்றியுள்ளார் சாய்னா நேவால். இன்ஸ்டாகிராமில் தனது கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தைப் பகிர்ந்த அவர், “சில தருணங்களில் அருகில் இருப்பதன் முக்கியத்துவத்தை தூரம் உணர்த்துகிறது. நாம்… மீண்டும் முயற்சிக்கிறோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். சாய்னாவின் இந்த முடிவால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலரும் அவருக்கு வாழ்த்துக்களையும் அன்பையும் தெரிவித்துள்ளனர்.
சாய்னாவும் காஷ்யப்பும் சிறுவயது முதல் ஹைதராபாத் கோபிசந்த் பேட்மின்டன் அகாடமியில் இணைந்து பயிற்சி பெற்றவர்கள். ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்றதுடன், உலக வரிசையில் நம்பர் 1 வீராங்கனையாக விளங்கிய சாய்னா, தனக்கென தனி இடத்தை பெற்றவர். ஆடவர் பிரிவில் காஷ்யப்பும் ஒருகாலத்தில் உலக தரவரிசையில் முதல் 10 இடங்களில் இருந்தவர். அவர் 2014ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்றிருந்தார். சாய்னா காமன்வெல்த் போட்டிகளில் இருமுறை சாம்பியனாக இருந்துள்ளார். 2018ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.