டிவில்லியர்ஸ் சதத்துடன் பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியனாக திகழ்ந்த தென் ஆப்பிரிக்கா

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் உலக சாம்பியன் தொடரின் இறுதிச் சுற்றில் பாகிஸ்தான் அணியை தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா. இந்தப் போட்டியில் 60 பந்துகளில் அதிரடியாக 120 ரன்கள் குவித்து ரசிகர்களை கவர்ந்தார் தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி டிவில்லியர்ஸ்.

கடந்த மாதம் இங்கிலாந்தில் துவங்கிய இந்த கிரிக்கெட் தொடர் நேற்று (ஆக. 2) நிறைவடைந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, மேற்கு இந்திய தீவுகள் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றன. சர்வதேச அளவில் சிறந்தே விளங்கிய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இதில் பங்கேற்றனர்.

இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் நேற்று நடைபெற்ற இந்த இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் களமிறங்கி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 195 ரன்கள் குவித்தது. ஷர்ஜீல் கான் 44 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார். உமர் அமீன் 36, ஆசிப் அலி 28, ஷோயிப் மாலிக் 20 ரன்கள் எடுத்தனர்.

196 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி ஹசிம் ஆம்லா மற்றும் டிவில்லியர்ஸ் ஜோடியாக இன்னிங்ஸை தொடங்கியது. ஆம்லா 18 ரன்களில் வெளியேறினார். முதல் விக்கெட்டுக்கு 72 ரன்கள் கூட்டணி அமைந்தது. தொடர்ந்து ஜே.பி. டுமினியுடன் இணைந்து டிவில்லியர்ஸ் 125 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்.

மொத்தம் 16.5 ஓவர்களில் ஒரே ஒரு விக்கெட் இழப்பில் 197 ரன்கள் எடுத்தது தென் ஆப்பிரிக்கா. டிவில்லியர்ஸ் 60 பந்துகளில் 120 ரன்கள் விளாசினார். டுமினி 28 பந்துகளில் 50 ரன்கள் சேர்த்தார். இந்த ஆட்டத்தில் சிறந்த வீரர் விருது டிவில்லியர்ஸுக்கு வழங்கப்பட்டது.

Facebook Comments Box