‘இதைப் பற்றிப் பொறுப்புடன் சிந்தியுங்கள் கம்பீர்’ – தினேஷ் கார்த்திக் எச்சரிக்கை!

நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் 0-3 என வெற்றியின்றி முடிவு, ஆஸ்திரேலியாவில் 1-3 என சரிவு, இடையில் சாம்பியன்ஸ் டிராபி வெற்றி — இவற்றால் கம்பீரின் பயிற்சியாளரான பயணம் மிகுந்த ஏற்றத் தாழ்வுகளோடு தொடர்ந்தது. தற்போது இங்கிலாந்து தொடரை சமநிலைக்கு கொண்டுவந்ததால், கம்பீரின் மதிப்பில் ஓரளவு உயர்வு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், டெஸ்ட் அரங்கத்தில் கம்பீர் இன்னும் அனுபவமற்ற பயிற்சியாளர் என்பதையே தன் பார்வையாக கூறுகிறார் தினேஷ் கார்த்திக்.

பேட்டிங்கில் டெப்த் தேவை எனும் காரணத்தால், இங்கிலாந்து தொடரில் குல்தீப் யாதவ் புறக்கணிக்கப்பட்டது இந்தியாவின் முன்னாள் வீரர்கள் கும்ப்ளே, சாஸ்திரி, கவாஸ்கர் மட்டுமன்றி, மைக்கேல் கிளார்க், ரிக்கி பாண்டிங், இயன் ஹீல் போன்ற உலக முன்னணி முன்னாள் வீரர்களுக்கும் புரியாததாயிருந்தது. பேட்டிங்கில் ஆழம் தேடும் கம்பீர் பவுலிங்கில் ஏன் அதே அக்கறையுடன் அணியை அமைக்கவில்லை என்பதுதான், கம்பீர் இக்கட்டத்தில் தீவிரமாக சிந்திக்க வேண்டிய விஷயமாக இருக்கிறது எனத் தெரிவிக்கிறார் தினேஷ் கார்த்திக்.

ஒரு ஆங்கில ஊடகத்திற்கு வழங்கிய பேட்டியில் தினேஷ் கார்த்திக் கூறும்போது, “நியூசிலாந்து தொடரில் கம்பீருக்கு மிகவும் மோசமான அனுபவமே ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவுடன் நடத்தப்பட்ட தொடரும் அதே நிலையே. இங்கிலாந்து தொடரில் மட்டும், அணியை தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளார் என்கிற உணர்வை அளிக்கிறார்.

இந்த அணியை அவரே தேர்வு செய்தார். இளம் வீரர்கள் கொண்ட குழு. ஷுப்மன் கில் போன்ற வீரர்களுடன் கம்பீர் ஒரு ஊக்கமளிக்கும் சக்தியாக உள்ளார். ஆனால், கம்பீர் தீவிரமாக சிந்திக்க வேண்டியது — எதிரணி விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனுள்ள பவுலிங் அட்டவணையை உருவாக்குவதுதான். பேட்டிங்கில் கடைசி வரைக்கும் தடையில்லாமல் ஆடக்கூடிய அணியை விரும்பும் அவர், பவுலிங்கிலும் அதே அளவிலான கவனத்துடன் அணியை அமைக்க வேண்டும்.

வெள்ளைப் பந்தில் கம்பீர் சிறந்த பயிற்சியாளராக திகழ்கிறார், சாதனைகளும் அதற்குச் சாட்சி. ஆனால் டெஸ்ட் போட்டிகளில் அவருக்கு அனுபவம் குறைவாக உள்ளது. உள்நாட்டு போட்டிகளில் பயிற்சியாளராக இருந்த அனுபவமும் இல்லை. வீரர்களிடம் அவர் எப்படி தொடர்பு கொள்ளுகிறார் என்பதும் தெரியவில்லை. இருந்தாலும் இளம் வீரர்களிடையே அவர் தீவிர உற்சாகத்தை உருவாக்குகிறார்.

தோல்வியைத் தவிர்க்கும் அணியை அவர் தேர்ந்தெடுத்திருப்பதாகவே நாம் கருதலாம். இப்போது அவர் தனது பாதையைத் தொடங்கி விட்டார். இனி அவர் தான் அனைத்து முடிவுகளுக்கும் பொறுப்பாளி. அணி வெற்றி பெற்றால், பாராட்டுகள் அவருக்கே செல்லும். ஆனால் தோல்வி ஏற்பட்டால், அவர் நேர்மையாக தன் பிழையை ஒப்புக்கொண்டு, ‘ஆம், இது எங்களது தவறே’ என ஏற்க வேண்டியது அவசியம். இங்கிலாந்து தொடரில் வீரர்கள் காட்டிய முயற்சியைக் கம்பீர் பெருமையுடன் பார்வையிட வேண்டும்” என்றார் தினேஷ் கார்த்திக்.

Facebook Comments Box