பேடல் விளையாட்டில் ஈடுபட்டு மகிழ்ந்த தோனி, ருதுராஜ், அனிருத் – வைரலான காட்சி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் எம்.எஸ். தோனி, வீரர் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் ‘பேடல்’ விளையாடி மகிழ்ந்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த காட்சியின் பின்னணி இசையாக ‘கூலி’ திரைப்படத்தின் பாடல் இடம்பெற்றுள்ளது.

‘7பேடல்’ என்ற புதிய பேடல் பிராண்டை தோனி அறிமுகப்படுத்தியுள்ளார். இதன் முதலாவது மையத்தின் தொடக்க விழா வியாழக்கிழமை சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் தோனியுடன் ருதுராஜ் மற்றும் அனிருத் கலந்து கொண்டனர்.

இந்த மையம், சென்னை பாலவாக்கம் ஈசிஆர் சாலையில், எம்ஜிஆர் சாலை – ஆல்பாபெட் பள்ளி அருகில் அமைந்துள்ளது. சுமார் 20,000 சதுர அடியில் பரந்துள்ள இம்மையத்தில் மூன்று பேடல் மைதானங்கள், ஒரு பிக்கில் பால் மைதானம், நீச்சல் குளம், உடற்கல்வி கூடம் மற்றும் கஃபே வசதிகள் உள்ளன.

திறப்பு விழாவில் தோனி கூறியதாவது:

“சென்னை எனக்கு எப்போதும் விசேஷமானது. இந்த நகரம், மைதானத்திலும் அதன் வெளிப்புறத்திலும் எனக்கு அளித்த பங்களிப்பு அளவிட முடியாதது. அதனால், எனது முதல் பேடல் மையத்தை சென்னையில் துவங்குவது சரியான முடிவு என நினைக்கிறேன். இந்த விளையாட்டு மிகவும் சுவையானதும், தொழில்முறை வீரர்கள் மட்டுமின்றி அனைவரும் விளையாடக்கூடியதும் ஆகும். விளையாட்டு வீரர்கள், உடல்நல ஆர்வலர்கள் மற்றும் குடும்பத்தினருக்கான இடமாக ‘7பேடல்’ இருக்கும்.”

அதன்பின், தோனி, ருதுராஜ் மற்றும் அனிருத் இணைந்து பேடல் விளையாடி மகிழ்ந்தனர். அந்த காட்சி தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.

பேடல் பற்றி:

பேடல் என்பது டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் விளையாட்டுகளின் கலவையாகும். 20×10 மீட்டர் அளவுள்ள மைதானத்தில், ராக்கெட் (பேட்) மற்றும் பந்துடன் இது விளையாடப்படுகிறது. இரட்டையர் பிரிவில் நடைபெறும் இந்த விளையாட்டு, இந்தியாவில் சமீபகாலமாக அதிகப் பிரபலமடைந்து வருகிறது.

Facebook Comments Box