தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025: இணையதள முன்பதிவுக்கு கால அவகாசம் நீட்டிப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைப் போட்டிகள் 2025-க்கான இணையதள முன்பதிவு (online registration) செய்திட ஆக.20 வரை கால அவகாசம் நீட்டிக்கபட்டுள்ளது என சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “2025 – 2026-ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியர்கள், மாற்றுத்திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள் பிரிவு என ஆண் பெண் இருபாலருக்கும் மாவட்ட அளவில் 5 பிரிவுகளில் 25 வகையான விளையாட்டு போட்டிகளும், மண்டல அளவில் 7 வகையான விளையாட்டு போட்டிகளும், மாநில அளவில் மொத்தமாக 37 வகையான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படவுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதங்களில் நடைபெறவுள்ளது.
முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள் அனைவரும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் https://smtrophy.sdat.in மற்றும் https://sdat.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக வீரர்களின் குழு மற்றும் தனி நபர்களின் அனைத்து விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
முன்பதிவு செய்திட கடைசி நாள் 16.08.2025 மாலை 6 மணி வரை என அறிவிக்கப்பட்ட நிலையில், விளையாட்டு வீரர்/வீராங்கனைகள் அதிகளவில் பங்கேற்றிடும் பொருட்டு இணையதளத்தில் பதிவு நாள் நீட்டிக்கப்பட்டு 20.08.2025 மாலை 8 மணி வரை பதிவு செய்து கொள்ளலாம். இணையதளம் மூலம் பதிவு செய்தவர்கள் மட்டுமே போட்டிகளில் பங்கேற்க முடியும்.
மேலும், முக்கிய விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டு அரங்கம், நேருபூங்கா, சென்னை-84 ஆகிய இடங்களை தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 74017 03480.
இந்த வாய்ப்பினை சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுள்ளார்.