ஆசியக் கோப்பையில் பும்ரா பங்கேற்கிறாரா?
வரவிருக்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற 5 டெஸ்ட் போட்டிகளில் பும்ரா மூன்றில் மட்டுமே பங்கேற்றார். பணிச்சுமை காரணமாக இரண்டு ஆட்டங்களில் அவர் ஓய்வு பெற்றார். காயம் தொடர்பான கவலைக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் அவரை கவனமாக களமிறக்கி வருகிறது.
இந்த நிலையில், பும்ரா ஆசியக் கோப்பையில் பங்கேற்பார் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான தகவலை பும்ரா தரப்பு தேர்வுக்குழுவிடம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிதான் பும்ராவின் கடைசி டி20 ஆட்டம். அதேபோல், 2023 ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டிதான் அவர் கடைசியாக விளையாடிய ஒருநாள் கிரிக்கெட் போட்டி.
இதனால், நீண்ட இடைவேளைக்குப் பிறகு வெள்ளைப் பந்து கிரிக்கெட்டில் பும்ரா திரும்புவாரா என்ற ஆவல் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு நடந்த ஐசிசி சாம்பியன்ஸ் டிரோபியில் காயம் காரணமாக பும்ரா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் செவ்வாய்க்கிழமை அஜித் அகர்கர் தலைமையிலான பிசிசிஐ தேர்வுக்குழு கூடுகிறது. அப்போது ஆசியக் கோப்பைக்கான 15 வீரர்களுடன் கூடிய இந்திய அணி தேர்வு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியக் கோப்பை: இந்தத் தொடர் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஒரே குழுவில் உள்ளதால், இரு அணிகளும் குறைந்தபட்சம் மூன்று முறை மோதும் வாய்ப்பு உள்ளது. செப்டம்பர் 14-ஆம் தேதி துபாயில் நடைபெறும் குழு சுற்றுப் போட்டியில் இரு அணிகளும் முதன்முறையாக மோதவுள்ளனர்.