டெவால்ட் பிரேவிஸ் ஒப்பந்த சர்ச்சை: தெளிவுபடுத்திய அஸ்வின்!
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த அதிரடி இளம் வீரர் டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஐபிஎல் 2025 சீசனில் மாற்று வீரராக ஒப்பந்தம் செய்தது. இது குறித்து அண்மையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியிருந்தார்.
அவரது கருத்து சர்ச்சையான நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் விளக்கம் கொடுத்திருந்தது. இந்த சூழலில் அஸ்வின் தற்போது தெளிவுபடுத்தி உள்ளார்.
“டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்தது குறித்து விளக்கம் அளித்துள்ளது. எக்ஸ் தளத்தில் அந்த ட்வீட்டை நான் பார்த்தேன். அதில் சிலர் தங்களது கருத்தை கமெண்ட் மூலம் தெரிவித்திருந்தனர். அதில் எனக்கு இதை சொல்ல வேண்டும் என சொன்னார்கள்.
நான் இதை நிச்சயம் சொல்ல வேண்டும். எங்களது கருத்தை தெரிவிக்கவே நாங்கள் யூடியூப்பில் வீடியோ வெளியிட்டு வருகிறோம். டெவால்ட் பிரேவிஸை பற்றிய என் வீடியோவில் அவரது ஆட்டம் குறித்து நான் பேசியிருந்தேன். சரியான நேரத்தில் அவரை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்துள்ளது எனக் கூறி இருந்தேன்.
அந்த வீடியோவை முழுவதுமாக பார்த்தவர்கள் இதுபோல் சொல்ல முடியாது. சில நிமிடங்களையும் மட்டும் பார்த்தவர்கள் இதைத் திரித்து சொல்கிறார்கள்.
இந்த விவகாரத்தின் தலைப்பு “சரியான நேரத்தில் டெவால்ட் பிரேவிஸை ஒப்பந்தம் செய்த சிஎஸ்கே அணி!” என்பதாகவே இருக்க வேண்டும். மாற்றி அர்த்தம் கூறியவர்கள் குறித்து எனக்கு எந்த கருத்தும் இல்லை.
மேலும், அந்த வீடியோவில் டெவால்ட் பிரேவிஸை எந்த தொகைக்கு ஒப்பந்தம் செய்தார்கள் என நான் பேசவில்லை. எனக்கு அது தெரியாது. ஆனால், எனக்கு தெரிந்தது என்னவென்றால், அவரை ஒப்பந்தம் செய்ய வேறு சில அணிகளும் ஆர்வத்துடன் இருந்தன. அந்த சூழலில்தான் சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்தது. அது மாஸ்டர் ஸ்ட்ரோக். அதை ஹைலைட் செய்துதான் நான் பேசி இருந்தேன்.
இன்றைய காலத்தில் சரியான விஷயத்துக்கு கூட விளக்கம் தர வேண்டியுள்ளது. இதில் யாருக்கும் தவறு இல்லை. வீரர் தரப்பு, அணி மற்றும் ஐபிஎல் நிர்வாகம் யாரும் தவறாக இல்லை” என அஸ்வின் கூறியுள்ளார்.