‘லார்ட்ஸ் வெற்றி என்றென்றும் மறக்க முடியாத ஒன்று’ – ஷோயப் பஷீர்

இந்திய அணிக்கு எதிராக லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் கிடைத்த அதிரடி வெற்றி எப்போதும் நினைவில் நிற்கும் அனுபவமாக இருக்கும் என இங்கிலாந்தின் சுழற்பந்து வீச்சாளர் ஷோயப் பஷீர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஜூலை 10 முதல் 14 வரை இந்தியா – இங்கிலாந்து அணிகள் லார்ட்ஸில் மோதின. அந்தப் போட்டியின் 5-ம் நாள், 22 ரன்களில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. ஜடேஜா 61 ரன்களுடன் ஒரு முனையில் எதிர்ப்பைத் தந்த நிலையில், மறுமுனையில் சிராஜ் 30 பந்துகளில் 4 ரன்கள் எடுத்துவிட்டு பஷீர் பந்தில் அவுட் ஆனார்.

“இந்த டெஸ்ட் தொடரின் போது எட்ஜ்பாஸ்டனில் மொயின் அலியை சந்தித்தேன். அப்போது அவர் ‘கேரம் பால்’ வீச முயற்சி செய்யும்படி ஊக்குவித்தார். நான் அதற்குப் பயிற்சி எடுத்திருந்தாலும், அதை செய்வேன் என்ற நம்பிக்கையை விதைத்தவர் ‘மோ’ தான். நான் விரும்பும் வீரர் அவர். இங்கிலாந்தில் ஆஃப் ஸ்பின்னராக விளையாடுவது எளிதான காரியம் இல்லை.

சிராஜின் விக்கெட்டை ஏற்கனவே எட்ஜ்பாஸ்டனில் பெற்றிருந்தேன். மணிக்கு 43-44 மைல் வேகத்தில் பந்தை வீசியிருந்தேன். லார்ட்ஸ் போட்டியில் நாங்கள் வாய்ப்புகளை உருவாக்கினாலும் விக்கெட்டுகள் விழவில்லை. அந்த நேரத்தில் கேப்டன் ஸ்டோக்ஸ் என்னை பந்து வீச அழைத்தார். சிராஜுக்கு அழுத்தம் கொடுக்க ஜோ ரூட்டை சில்லி பாயிண்டில் நிறுத்தினேன்.

என்னால் முடிந்த அளவு சுழல் செய்தேன். அதிர்ஷ்டவசமாக அந்த பந்து பேட்டில் பட்டுத் தரையில் உருண்டு பெயில்ஸைத் தொட்டு விக்கெட்டை தகர்த்தது. முதலில் எனது கோணத்தில் இருந்து தெளிவாகத் தெரியவில்லை. பிறகு தான் விக்கெட் விழுந்ததை அறிந்தேன். அந்த சந்தோஷ தருணம் எப்போதும் என் நினைவில் நிலைத்திருக்கும்” என பஷீர் கூறினார்.

இந்த தொடர் 2-2 என சமனில் முடிந்தது. லார்ட்ஸ் போட்டிக்குப் பிறகு காயம் காரணமாக பஷீர் தொடரிலிருந்து விலகினார்.

Facebook Comments Box