இந்திய கிரிக்கெட் அணியின் ட்ரீம்11 ஸ்பான்சர்ஷிப் சிக்கலில்! – காரணம் இதோ?
2023-ல், இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான ஜெர்ஸி ஸ்பான்சராக ட்ரீம்11 அறிவிக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு ₹358 கோடி மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியது. ஆனால் தற்போது, வரவிருக்கும் ஆசியக் கோப்பை தொடரில், இந்திய அணி தனது ஜெர்ஸியில் ஸ்பான்சர் பெயர் இல்லாமல் களமிறங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்குக் காரணமாக, மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கடந்த வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்த ஆன்லைன் விளையாட்டு மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா 2025 அமைந்துள்ளது. ஆன்லைன் சூதாட்டத்தை கட்டுப்படுத்தும் இந்த மசோதா, டிஜிட்டல் தளங்களில் நடைபெறும் பந்தய விளையாட்டுகளுக்கு அபராதமும், 7 ஆண்டு வரை சிறைத் தண்டனையும் விதிக்க வழி செய்கிறது. இதை கண்காணிக்கும் பொறுப்பு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் ஃபேன்டஸி விளையாட்டுகள் மற்றும் சூதாட்ட தளங்கள் என்ற பிரிவுக்குள் ட்ரீம்11 வருவதால், அதன் ஸ்பான்சர் ஒப்பந்தம் ஆபத்தில் உள்ளது எனக் கூறப்படுகிறது. இதன் மூலம், இந்திய கிரிக்கெட் அணியின் ஜெர்ஸி ஸ்பான்சராக ட்ரீம்11 தொடர முடியாமல் போகலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
இது குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் விவாதித்து வருகின்றனர். ஆனால், இதுவரை பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை. “மத்திய அரசு எவ்வாறு கொள்கை வகுத்தாலும் அதைப் பின்பற்றுவதே பிசிசிஐயின் நிலைப்பாடு” என்று அந்த வாரியத்தின் ஒரு மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
அதே சமயம், புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டவுடன், பணம் வைத்து விளையாடும் போட்டிகள் மற்றும் கேம்கள் நிறுத்தப்பட்டுள்ளன என்று ட்ரீம்11 தானே அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.