நவம்பரில் கேரளா மண்ணில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி போட்டி
வரும் நவம்பர் மாதம் கேரளாவில் நட்பு ரீதியான கால்பந்து போட்டியில், உலக சாம்பியன் அர்ஜெண்டினா அணி விளையாடுவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் தலைவராக விளையாடும் லியோனல் மெஸ்ஸியின் வருகை கேரளா ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, அர்ஜெண்டினா அணி கேரளாவில் விளையாடுமா என்பது குறித்த குழப்பம் நிலவியது. மாநில அரசு மற்றும் போட்டி ஸ்பான்சர்கள் கருத்து வேறுபாட்டில் இருந்த நிலையில், அணியின் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டு நவம்பர் மாதம் கேரளாவில் போட்டி நடைபெறும் என்று உறுதி செய்துள்ளது.
அர்ஜெண்டினா அணி அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு நட்பு போட்டி அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 6 முதல் 14ஆம் தேதி வரை அமெரிக்காவில், நவம்பர் 10 முதல் 18ஆம் தேதி வரை அங்கோலாவின் லுவாண்டா மற்றும் இந்தியாவின் கேரளாவில் அர்ஜெண்டினா விளையாட உள்ளது. ஆனால், கேரளாவில் அர்ஜெண்டினாவுக்கு எதிராக ஆடும் அணியின் விவரம் இதுவரை வெளிவரவில்லை.
போட்டி முடிந்த பின் மெஸ்ஸி இந்தியாவில் நான்கு நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவர் கொல்கத்தா, மும்பை, அகமதாபாத் மற்றும் டெல்லி ஆகிய நகரங்களைச் சுற்றிப் பார்ப்பார். மேலும், பிரதமர் நரேந்திர மோடியையும், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் சந்திக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.