சஞ்சு சாம்சனின் பலிகடா நிலைமைக்கு ஷுப்மன் கில்லே காரணமா? – எழும் கடும் விவாதங்கள்
“திடீரென எங்கிருந்து வந்தார் ஷுப்மன் கில்?” என்ற கேள்வியை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் எழுப்பியுள்ளார். ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான இந்திய அணியில் ஷுப்மன் கில் துணைக் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டதும் சர்ச்சைகளை தூண்டியுள்ளது. குறிப்பாக, சஞ்சு சாம்சனின் சர்வதேச வாழ்க்கை முடிவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், இதற்கு கம்பீர்–அகார்கர் கூட்டணி காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
“ஏன் சஞ்சு சாம்சனே பலிகடா?” என்ற கேள்வி எழுகிறது. அணி அமைப்பைப் பார்க்கும்போது, ஜிதேஷ் சர்மா முதன்மை விக்கெட் கீப்பராக அறிவிக்கப்பட்டதால், சஞ்சுவுக்கு பிளேயிங் லெவனில் இடமில்லை என்பது வெளிப்படையாகிறது. கில்–அபிஷேக் தொடக்க ஜோடியாக, திலக் வர்மா, சூரியகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, சிவம் துபே, ரிங்கு சிங், அக்சர் படேல் ஆகியோருக்குப் பிறகு சஞ்சுவுக்கு இடமில்லை.
இப்படியிருக்க, அணியில் சஞ்சுவை சேர்த்தது யாருக்காக? ஏன்? என்ற கேள்விகள் முன்னாள் வீரர்களிடையே கிளம்பியுள்ளது. மேலும, கிலை வைஸ் கேப்டனாக நியமித்திருப்பதால் அவரை நீக்க இயலாது. அப்படியிருக்க சஞ்சுவை ஏன் சேர்த்தனர் என்ற சந்தேகம் எழுகிறது.
பங்களாதேஷுக்கு எதிராக 47 பந்துகளில் 111, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டர்பனில் 107, ஜொஹான்னஸ்பர்கில் 109* ஆகிய சதங்களை சஞ்சு அடித்திருந்தபோதும், அவரை புறக்கணிப்பது நியாயமா என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுகிறது. கவுதம் கம்பீர் ஒருமுறை “நீ 21 டக்குகள் அடித்தால்தான் அணியில் இருந்து நீக்குவேன்” என்று சஞ்சுவிடம் சொன்னதாக கூறப்படுகிறது. உண்மையில் அவர் 21 டக்குகள் அடித்துவிட்டாரா? என்ற கேள்வியே இப்போது நகைச்சுவையாக மாறியுள்ளது.
அகார்கர், “கில் இல்லாததால் தான் சஞ்சு ஆடினார்” என்று கூறியிருப்பது விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது. ஒரு விக்கெட் கீப்பரை, மாற்று வீரர் அந்தஸ்தில் வைத்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தப் புள்ளியை ரவிச்சந்திரன் அஸ்வின் தன் யூடியூப் சேனலில் சுட்டிக்காட்டி, “கில்லை துணைக் கேப்டனாக்கியதால், சஞ்சுவின் இடம் ஆபத்தில் உள்ளது. சஞ்சு ஆட வாய்ப்பு இல்லை; கில்தான் ஓப்பனிங் ஆடுவார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கில்லை எல்லா வடிவங்களிலும் கேப்டனாக்கும் திட்டம், விராட்–ரோஹித் காலத்திற்கு பின் புதிய ‘பிராண்ட்’ உருவாக்கும் முயற்சி எனவும் கூறப்படுகிறது. கம்பீர் ஒருபுறம் “ஹீரோ கலாச்சாரம் இல்லை” எனக் கூறினாலும், மறுபுறம் கிலுக்காக பிராண்ட் கட்டுமானம் செய்வதாக குற்றச்சாட்டு எழுகிறது. இதனால் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஸ்ரேயஸ் அய்யர், சஞ்சு சாம்சன் ஆகியோரின் டி20 வாழ்க்கை பாதிப்படைவதாகக் கூறப்படுகிறது.
முன்னாள் தொடக்க வீரர் ஆகாஷ் சோப்ரா கூட இதையே ஏற்று, “இந்தியா மூன்று வடிவத்துக்கும் ஒரே கேப்டனை நோக்கி செல்கிறது. ஆனால், ஒருவரின் முன்னேற்றம், இன்னொருவரின் வாழ்க்கையை பலிகடா ஆக்குகிறது. சஞ்சு இனி பிளேயிங் லெவனில் இடம் பெற முடியாது” எனக் கூறியுள்ளார்.
அவரின் கூற்றுப்படி, “சஞ்சுவின் மூன்று சதங்கள் கூட அவரை காப்பாற்றவில்லை. அகார்கரின் பேச்சே அவரது கரியர் முடிவுக்கு வந்துவிட்டதற்கான சான்று” என்று விமர்சித்துள்ளார்.