புஜாரா ஓய்வு – பிசிசிஐ மீது ரசிகர்கள் குற்றச்சாட்டு!
இந்திய கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா, அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
2010-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் அரங்கில் அறிமுகமான புஜாரா, மொத்தம் 103 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7,195 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 19 சதங்கள், 35 அரைசதங்கள் அடங்கும். முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட்டுக்குப் பின் “இந்தியாவின் சுவர்” என்று ரசிகர்கள் மதித்தவர் இவரே. டெஸ்ட் சராசரி 43.61, மொத்தம் 16,217 பந்துகளை எதிர்கொண்டுள்ளார்.
2023-க்கு பின் தேசிய அணியில் இடம் கிடைக்காததால், தனது ஓய்வை அறிவித்துள்ளார். “டெஸ்ட் கிரிக்கெட்டுக்காக வாழ்ந்த புஜாராவுக்கு பிசிசிஐ போதிய வாய்ப்பு அளிக்கவில்லை” என்று ரசிகர்கள் கண்டனம் தெரிவிக்கின்றனர்.
📌 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 13-வது இந்தியர் என்ற சாதனை புஜாராவுக்கு சொந்தம். டெஸ்டில் அதிக ரன்கள் அடித்த இந்தியர்களில் அவர் 8-வது இடத்தில் உள்ளார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 25 டெஸ்ட்களில் 2,074 ரன்கள், 5 சதங்கள், 11 அரைசதங்கள் சேர்த்துள்ளார்.
ஓய்வு குறித்து புஜாரா கூறியதாவது:
“இந்திய அணியின் ஜெர்சி அணிந்து, தேசிய கீதம் பாடி, ஒவ்வொரு முறையும் மைதானத்தில் களம் காண்ந்தது எனக்கு மறக்க முடியாத அனுபவம். எல்லாவற்றுக்கும் ஒரு முடிவு உண்டு. அதன்படி நான் அனைத்து விதமான இந்திய கிரிக்கெட்டிலிருந்தும் விலகுகிறேன். இந்த விளையாட்டு எனக்கு அளித்த அன்பு, அனுபவங்கள், வாய்ப்புகள் அனைத்திற்கும் என்றும் நன்றி கூறுகிறேன். என் மாநிலத்துக்கும், என் நாட்டிற்கும் விளையாடிய பெருமையை என்றும் மறக்க மாட்டேன்” என்று அவர் தெரிவித்தார்.
ஐபிஎல்-இல் கொல்கத்தா, பஞ்சாப், பெங்களூரு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் புஜாரா விளையாடியுள்ளார்.