யுஎஸ் ஓபன் டென்னிஸ்: 2-வது சுற்றில் ஜோகோவிச், சபலென்கா முன்னேற்றம்
ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு:
7-வது நிலை வீரரும், 4 முறை யுஎஸ் ஓபன் சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 19 வயதான அமெரிக்க வீரர் லர்னர் டியனை 6-1, 7-6 (7-3), 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்குச் சென்றார்.
4-வது நிலை வீரரான அமெரிக்காவின் டெய்லர் ஃபிரிட்ஸ், சக நாட்டைச் சேர்ந்த எமிலியோ நவாவை 7-5, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் தோற்கடித்தார். அதேபோல் 6-வது நிலை வீரர் பென் ஷெல்டன் பெருவின் இக்னாசி யோவை 6-3, 6-2, 6-4 என நேர்செட்டில் வென்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார்.
ஆனால் 13-வது நிலை வீரரான ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவ், பிரான்ஸின் 51-வது நிலை வீரர் பெஞ்ஜமின் போன்ஸியிடம் 3-6, 5-7, 7-6 (7-5), 6-0, 4-6 என்ற கணக்கில் கடுமையாகப் போராடி தோல்வி அடைந்தார். இந்த ஆட்டம் 3 மணி 45 நிமிடங்கள் நீடித்தது.
பெண்கள் ஒற்றையர் பிரிவு:
தற்போதைய சாம்பியனும், உலகின் முதலிடம் வகிக்கும் அரினா சபலென்கா (பெலாரஸ்), சுவிட்சர்லாந்தின் ரெபேக்கா மசரோவாவை 7-5, 6-1 என நேர்செட்டில் வென்று 2-வது சுற்றில் முன்னேறினார்.
அமெரிக்காவின் 4-வது நிலை வீராங்கனை ஜெசிகா பெகுலா, எகிப்தின் மாயர் ஷெஃரிப்பை 6-0, 6-4 என்ற கணக்கில் வீழ்த்தினார். இத்தாலியின் 7-வது நிலை வீராங்கனை ஜாஸ்மின் பவுலினி, ஆஸ்திரேலியாவின் டெஸ்டானி ஐயாவாவை 6-2, 7-6 (7-4) என வென்றார்.
மேலும், 10-வது நிலை வீராங்கனையான அமெரிக்காவின் எம்மா நவர்ரோ, சீனாவின் வாங் யாஃபனை 7-6 (11-9), 6-3 என தோற்கடித்து அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றார்.