பணக் கஷ்டத்தை நினைத்து நம் கனவுகளை கைவிடக்கூடாது: ஆகாஷ் தீப் மனம் திறப்பு
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அசத்திய ஆகாஷ் தீப், அந்தத் தொடர் மற்றும் தன் வாழ்க்கை ஏற்படுத்திய சவால்கள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
”எப்படி நான் 5 டெஸ்ட் போட்டிகளுக்குத் தாங்கினேன்?” என்ற கேள்வியும் ஆச்சரியமும் அவரை விட்டு இன்னும் அகலவில்லை போல் தெரிகிறது. கிரிக்கெட் இணையதளம் ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
“ஐந்து டெஸ்ட் போட்டிகள் மிகமிகக் கடினம். அதுவும் ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கு ரொம்பவும் கடினம். குறிப்பாக நான் தொடருக்காக தயாரித்துக் கொள்ள வேண்டிய நேரத்தில் தான் ஏகப்பட்ட சவால்களை எதிர்கொண்டேன்.
மருத்துவமனையில் இருப்பதும் வெளியே வருவதுமான இருப்பு நம்முடைய உணவுக்கட்டுப்பாடு, தூக்கம் பெரிய இடையூறுக்குள்ளாகும். என் சகோதரியின் சிகிச்சை காரணமாக ஐபிஎல் தொடரின் போது கூட என் பயிற்சி சரியாக அமையவில்லை. நான் உண்மையில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை எப்படி தாங்கி மீண்டு வந்தேன்? ஆச்சரியம்தான்.
இந்தியா ஏ தொடருக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும், அந்தத் தயாரிப்புதான் தொடரில் என்னைத் தக்கவைத்தது. அதில் 10-15 நாட்கள் பயிற்சி எடுக்க முடிந்தது. அந்த காலக்கட்டத்தை நன்றாகத் தயார்ப்படுத்திக் கொள்ள பயன்படுத்தினேன்.
நான் வளர்ந்து வரும் காலக்கட்டத்தில் இங்கு ஒன்றுமே இல்லை. மைதானம் கிடையாது, பயிற்சி வசதி கிடையாது. 17-18 வயது வரை சிகப்பு நிற கிரிக்கெட் பந்தையே நான் பார்த்ததில்லை. எனவே தான் என்னிடம் பணம் மற்றும் பிற ஆதாரங்கள் வரும் போது நலிவுற்றோர் பிரிவில் இருந்து வரும் குழந்தைகளுக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் பிறந்தது. அவர்கள் ரயிலில் நீண்ட தூரம் பயிற்சிக்காக செல்ல வேண்டியிருக்கக் கூடாது.
நிதி ஆதாரம் வலுவாக இல்லை, பணக்கஷ்டம் என்பதால் நாம் நம் கிரிக்கெட் ஆட்டக் கனவுகளையோ, வரும் வாய்ப்புகளையோ கைவிடக்கூடாது. ஒரு அகாடமி ஆரம்பிக்க வேண்டும் என்ற என் கனவு நிறைவேறியதில் மகிழ்ச்சியடைகிறேன். நலிவுற்ற பின்னணியிலிருந்து வரும் திறமையுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறேன்.”
வளரும் காலங்களில் மிகவும் கஷ்டப்பட்டார் ஆகாஷ் தீப். கொல்கத்தாவில் 150 சதுர அடி அறையில் 8 பேருடன் தங்கியிருந்தார். கிளப் கிரிக்கெட் ஆடும்போது லெமன் டீ தான் ஆகாரம். தந்தை, சகோதரர் இருவரையும் குறுகிய இடைவெளியில் இழக்க நேரிட்டது. ஆனாலும் கவலைப்படாமல் மன உறுதியுடன் இருப்பார் ஆகாஷ் தீப். “பிரச்சனைகளுக்கு இடையே சிறிய சந்தோஷம் கிடைத்தாலும் ஒரு புன்னகையை வரவழைக்க அதுபோதும்..” என்கிறார்.
அட்கின்சனுக்கு ஓவல் டெஸ்ட் 5-ம் நாளில் கேட்ச் விட்டு அது சிக்ஸ் ஆனபோது இங்கிலாந்து வெற்றி இலக்கு 11 ரன்களாகக் குறைந்தது. இந்தத் தருணத்தில் அவருக்குக் கடும் பதற்றமே ஏற்பட்டது.
“நான் சிக்சரைத் தடுக்கவாவது முயற்சி செய்து தட்டி விட்டிருக்கலாம். நான் கேட்சை எடுத்து விடலாம் என்று போனேன். அதிர்ஷ்டவசமாக அடுத்த ஓவர் அட்கின்சன் விக்கெட்டை வீழ்த்தி விட்டோம். கேட்ச் விட்டவுடன் கூட அதைப் பற்றி யோசிக்கக் கூட நேரமில்லை. கேட்ச் விட்டதனால் வேறு ஏதாவது நடந்திருந்தால் நான் ஒருவேளை அதையே யோசித்துக் கொண்டிருந்திருப்பேன். அதிர்ஷ்டவசமாக அவ்வாறு எதுவும் நடக்கவில்லை. சிராஜ் கடைசி விக்கெட்டை வீழ்த்தியவுடன் நான் வேகமாக அவரை நோக்கி ஓடினேன்.”
பென் டக்கெட்டுடன் ஏற்பட்ட மோதல் குறித்துக் கூறும்போது, “என்னிடம் அவர் 4-5 முறை அவுட் ஆகியிருக்கிறார். அவர் என்னிடம் சொன்னார், இந்த முறை நீ என்னை அவுட் ஆக்க முடியாது என்றார். ஆனால் நான் அவரை வீழ்த்தினேன், அப்போது நான் அவரிடம் சொன்னேன், “புரோ.. போங்க போய் ரெஸ்ட் எடுங்க” என்றேன்.”
இவ்வாறு ஆகாஷ் தீப் கூறினார்.