”தமிழ்நாடு அணிக்காக இனி விளையாடப்போவதில்லை” – அதிர்ச்சி முடிவெடுத்த விஜய் சங்கர்!

புச்சி பாபு தொடரில் சமீபத்தில் தமிழ்நாடு லெவன் அணிக்காக விளையாடிய விஜய் சங்கர், இப்போது தமிழ்நாடு கிரிக்கெட் அணியிலிருந்து விலக முடிவு செய்துள்ளார்.

இதனுடன், தமிழ்நாடு அணியுடன் அவருடைய 13 ஆண்டுகால பயணம் முடிவடைந்துள்ளது. இனி திரிபுரா அணிக்காக அவர் விளையாட உள்ளார். 2011–12 சீசனில் தமிழ்நாடு அணியில் அறிமுகமான அவர், தற்போது தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திடமிருந்து ஆட்சேபனையின்மை (NOC) சான்றிதழ் பெற்றதால் திரிபுராவை சேர்ந்துள்ளார்.

புச்சி பாபு தொடரின் இரண்டாம் சுற்றில் மகாராஷ்டிராவுக்கு எதிரான போட்டியில் அவர் அணியில் இடம்பெறாமல் அமர வைக்கப்பட்டதே இந்த முடிவுக்கு காரணம். தனது 34-வது வயதில் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளார். கடந்த ஆண்டும் விஜய் சங்கர் ரஞ்சி தொடரில் இரண்டு போட்டிகளில் மட்டுமே விளையாடினார். சையத் முஷ்டாக் அலி தொடரிலும் சில போட்டிகளில் இடம்பெறவில்லை.

அந்த சீசனில் சிறப்பாக விளையாடியிருந்த போதிலும், அணியில் இடம் கிடைக்காதது குறித்த அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தார். எனவே, “பொறுத்தது போதும், இப்போது புதிய சவாலைத் தேட வேண்டும்” என்ற எண்ணத்தில் அணியை விட்டு வெளியேறியுள்ளார்.

2024–25 ரஞ்சி சீசனில் அவர் 476 ரன்களை 52.88 சராசரியுடன் எடுத்ததுடன், சத்தீஸ்கர் மற்றும் சண்டிகர் அணிகளுக்கு எதிராக இரண்டு சதங்களையும் பதிவு செய்தார்.

இதற்கு முன்பும் பாபா அபராஜித் தமிழ்நாடு அணியை விட்டு கேரளாவுக்கு சென்றார். தற்போது விஜய் சங்கரும் பிரிந்து செல்கிறார். தனது 70 முதல் தரப் போட்டிகளில் அவர் 3,702 ரன்களை 45.14 சராசரியில் எடுத்துள்ளார். இதில் 11 சதங்கள், 43 விக்கெட்டுகளும் அடங்கும்.

2014–15 சீசனில் தமிழ்நாடு அணியின் மிடில் ஆர்டர் நங்கூரமாக விளங்கிய விஜய் சங்கர், பின்னர் இந்தியா-ஏ அணியில் இடம்பிடித்தார். 2016–17 உள்நாட்டு ஒருநாள் தொடர்களான விஜய் ஹசாரே மற்றும் தியோதர் டிராபிகளில், தமிழ்நாடு அணியை தனது கேப்டன்சியில் கோப்பையை வெல்ல வழிநடத்தினார். 2021–22 சீசனில் தெற்கு மண்டல அணியை வழிநடத்தி சையத் முஷ்டாக் அலி கோப்பையையும் வென்றார்.

விஜய் சங்கரின் பங்களிப்பைப் பாராட்டிய தமிழ்நாடு அணியின் தலைமைப் பயிற்சியாளர் செந்தில்நாதன், “இப்போது தமிழ்நாடு கிரிக்கெட்டில் திறமையான இளம் வீரர்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. புதியவர்களின் வருகையால் அணிக்கு பஞ்சமில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Facebook Comments Box