‘அஸ்வினுக்கு பணம், புகழ், பெயர் அவ்வளவு முக்கியமில்லை’ – ஸ்ரீகாந்த் பாராட்டு
இந்தியாவின் சிறந்த ஆஃப் ஸ்பின்னராக விளங்கிய ரவிச்சந்திரன் அஸ்வின், ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது பலரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. அவர் இன்னும் 2 ஆண்டுகள் வரை ஐபிஎல் போட்டிகளில் விளையாடியிருக்கலாம் என்று முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் பயணத்தில் அஸ்வின், 7.2 என்ற சிறந்த சிக்கன விகிதத்துடன் 187 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். கடந்த சீசனில் அவர் எதிர்பார்த்த அளவில் விளையாடவில்லை. ரூ.9.75 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டாலும், அவர் சராசரியாக ஓவருக்கு 9.12 ரன்கள் விட்டுவிட்டார். அதனால் தான், பிற வெளிநாட்டு லீகுகளில் விளையாடும் வாய்ப்பை எதிர்நோக்குகிறேன் என அஸ்வின் தெரிவித்துள்ளார்.
ஆனால், இந்திய வீரர்களுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. காரணம் – பிசிசிஐ விதிமுறைகள். சர்வதேச மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டிலிருந்து முழுமையாக ஓய்வு பெற்றால் மட்டுமே பிற நாடுகளில் நடைபெறும் லீகுகளில் இந்திய வீரர்கள் பங்கேற்க முடியும்.
இந்நிலையில், யூடியூப் சேனலில் கருத்து தெரிவித்த ஸ்ரீகாந்த்,
“அஸ்வின் ஏன் ஓய்வு அறிவித்தார் என்று எனக்கு துல்லியமாக தெரியாது. ஆனால் நான் அவருடைய நிலையில் இருந்திருந்தால், இன்னும் குறைந்தது 2 ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடியிருப்பேன்.
அஸ்வினுக்கு பணம், பெயர், புகழ் போன்றவை பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஏற்கனவே இவை அனைத்தையும் அவர் போதுமான அளவில் பெற்றுவிட்டார். இன்னும் 2 ஆண்டுகள் ஐபிஎல் ஆடி, அதன் பிறகு பிற லீகுகளில் இணைந்திருக்கலாம்.
அஸ்வின் மட்டுமின்றி, மற்ற வீரர்களும் ஐபிஎல் வாய்ப்பு குறைந்தால் வெளிநாட்டு லீகுகளைத் தேர்வு செய்யலாம். ஆனால், ஐபிஎல் அளிக்கும் அங்கீகாரம், வெளிச்சம் மற்றும் புகழ் மற்ற லீகுகளில் எளிதில் கிடைக்காது.
அஸ்வின், ஐபிஎல் கிரிக்கெட் கண்ட சிறந்த வீரர்களில் ஒருவராக இருப்பார். குறிப்பாக கிறிஸ் கெயிலை அடிக்கடி வீழ்த்தியதன் மூலம் அவர் தனித்துவமான அங்கீகாரம் பெற்றார். ஐபிஎலில் அவர் ஒரே நேரத்தில் தாக்குதலான பந்துவீச்சும், சிக்கனமான பந்துவீச்சும் செய்தார்.
மெகா ஏலத்திற்கு பின் 3 ஆண்டு சுழற்சி முழுமையடையும் முன் அவர் ஓய்வு பெறுவது எனக்குச் சற்றே ஆச்சரியமாக உள்ளது. அதே சமயம், இங்கு ஓய்வு பெறும் வீரர்கள் அந்நிய லீகுகளில் பயிற்சியாளர்களாகவும், வீரர்களாகவும் செல்ல முடியும் என்பது நல்ல விஷயம்” என கூறினார்.