ஆசிய கோப்பை ஹாக்கி – இந்தியா vs சீனா இன்று மோதல்
ஆடவர் ஆசிய கோப்பை ஹாக்கி போட்டிகள் இன்று (ஆகஸ்ட் 29) பீஹாரின் ராஜ்கிரில் துவங்குகின்றன. செப்டம்பர் 7-ஆம் தேதி வரை நடைபெறும் இந்தப் போட்டியில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன.
இந்த தொடரின் சாம்பியன் பட்டம் வெல்லும் அணி, 2026 ஆகஸ்டில் பெல்ஜியம் மற்றும் நெதர்லாந்தில் நடைபெற உள்ள உலகக்கோப்பை ஹாக்கி தொடருக்குத் தேர்வின்றி நேரடி தகுதி பெறும். எனவே இந்த ஆசிய கோப்பை தொடருக்கு பெரும் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
முன்னாள் 3 முறை சாம்பியனான இந்தியா, ‘ஏ’ பிரிவில் இடம்பிடித்துள்ளது. தனது முதல் ஆட்டத்தில், உலக தரவரிசையில் 23-வது இடத்தில் இருக்கும் சீன அணியுடன் இந்திய அணி இன்று மோதுகிறது. இந்த ஆட்டம் மதியம் 3 மணிக்கு நடைபெறுகிறது.
சமீபத்தில் நடந்த புரோ லீக் தொடரில் இந்தியா 8 ஆட்டங்களில் 7 முறை தோல்வி கண்டது. அந்த ஆட்டங்களில் இந்திய அணியின் பாதுகாப்பு வரிசை பலவீனமடைந்து 26 கோல்கள் விடப்பட்டது. மேலும், பெனால்டி கார்னர்களை கோல்களாக மாற்றுவதிலும் அணிக்கு சிரமம் இருந்தது.
அதே நேரத்தில், கோல்கீப்பர்களான கிருஷ்ணன் பகதூர் வானில் வரும் பந்துகளைத் தடுத்து நிறுத்துவதிலும், சூரஜ் கர்கேரா நெருக்கடி சூழலில் திறம்பட செயல்படுவதிலும் தடுமாறியுள்ளனர். இந்த குறைகளை சரிசெய்து, ஆசிய கோப்பையில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி முயற்சி மேற்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.