யுஎஸ் ஓபன் டென்னிஸ்: 3-வது சுற்றுக்கு அல்கராஸ், ஜோகோவிச், சபலென்கா முன்னேற்றம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரில், ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பெலாரஸின் அரினா சபலென்கா உள்ளிட்டோர் 3-வது சுற்றுக்கு முன்னேறினர்.
ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில், 2-ம் நிலை வீரரான கார்லோஸ் அல்கராஸ் (ஸ்பெயின்), 65-ம் நிலை வீரரான இத்தாலியின் மட்டியா பெல்லுசியுடன் மோதினார். இதில் அல்கராஸ் 6-1, 6-0, 6-3 என்ற நேர் செட் கணக்கில் எளிதாக வெற்றி பெற்று 3-வது சுற்றுக்குச் சென்றார்.
4 முறை யுஎஸ் ஓபன் சாம்பியனாக விளங்கிய 7-ம் நிலை வீரர் நோவக் ஜோகோவிச் (செர்பியா), 145-ம் நிலை வீரரான அமெரிக்காவின் சக்கரி ஸ்வஜ்தாவை 6-7 (5-7), 6-3, 6-3, 6-1 என்ற செட் கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இதே போட்டியில், 5-ம் நிலை வீரர் ஜேக் டிராப்பர் (இங்கிலாந்து) காயம் காரணமாக விலகியதால், அவருடன் மோத வேண்டிய 48-ம் நிலை வீரர் ஜிஸோ பெர்க்ஸ் (பெல்ஜியம்) நேரடியாக வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அதேசமயம், 107-ம் நிலை வீரரான ரபேல் கொலிகன் (பெல்ஜியம்) 12-ம் நிலை வீரரான நார்வேயின் காஸ்பர் ரூடை 6-4, 3-6, 3-6, 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 3-வது சுற்றில் நுழைந்தார்.
4-ம் நிலை வீரர் டெய்லர் ஃபிரிட்ஸ் (அமெரிக்கா) 4-6, 7-6 (7-3), 6-2, 6-4 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்காவின் லாய்டு ஹாரிஸை வீழ்த்தினார். 6-ம் நிலை வீரர் பென் ஷெல்டன் (அமெரிக்கா) 6-4, 6-2, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஸ்பெயினின் பாப்லோ கரேனோ பஸ்டாவை தோற்கடித்தார்.
மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில், முதல் நிலை வீராங்கனையும் நடப்பு சாம்பியனுமான அரினா சபலென்கா (பெலாரஸ்) 67-ம் நிலை வீராங்கனையான போலினா குடெர்மெடோவாவை (ரஷ்யா) 7-6 (7-4), 6-2 என்ற நேர் செட் கணக்கில் தோற்கடித்து 3-வது சுற்றுக்குச் சென்றார்.
5-ம் நிலை வீராங்கனையான மிர்ரா ஆண்ட்ரீவா (ரஷ்யா) 6-1, 6-3 என்ற நேர் செட்டில் சகநாட்டைச் சேர்ந்த அனஸ்டசியா போஸ்டபோவாவை வென்றார். 9-ம் நிலை வீராங்கனையான எலெனா ரைபகினா (கஜகஸ்தான்) 6-3, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் செக் குடியரசின் தெரேசா வாலண்டோவாவை வீழ்த்தினார்.
மேலும், 4-ம் நிலை வீராங்கனையான ஜெசிகா பெகுலா (அமெரிக்கா) 6-1, 6-3 என்ற கணக்கில் ரஷ்யாவின் அனா பிளின்கோவாவை தோற்கடித்தார். 7-ம் நிலை வீராங்கனையான ஜாஸ்மின் பவுலினி (இத்தாலி) 6-3, 6-3 என்ற கணக்கில் அமெரிக்காவின் இவா ஜோவிக்கையும், 10-ம் நிலை வீராங்கனையான எம்மா நவர்ரோ (அமெரிக்கா) 6-2, 6-1 என்ற கணக்கில் சகநாட்டைச் சேர்ந்த கேட்டி மெக்நல்லியையும் வீழ்த்தி 3-வது சுற்றில் முன்னேறினர்.