ILT20 லீக் ஏலத்தில் அஸ்வின் பெயர் பதிவு

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடைபெறவுள்ள இன்டர்நேஷனல் லீக் டி20 (ILT20) தொடரில் விளையாடும் நோக்கில், அஸ்வின் தனது பெயரை வீரர்கள் ஏலத்தில் பதிவு செய்துள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

சமீபத்தில் ஐபிஎல் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்த அஸ்வின், இனிமேல் வெளிநாட்டு லீக்குகளில் சுதந்திரமாக விளையாட விரும்புவதாகவும், எதிர்கால கிரிக்கெட் திட்டங்களைத் தெளிவாக வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், ஐபிஎல் முறையில் நடத்தப்படும் ILT20 லீக் தொடருக்கான வீரர் ஏலம் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதி நடைபெற உள்ளது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் இதில் பங்கேற்க பதிவு செய்யலாம். இதற்கான கடைசி தேதி செப்டம்பர் 10 என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் தான் ILT20 லீக்கில் பங்கேற்கவுள்ளதாக அஸ்வின் கிரிக்கெட் செய்தி நிறுவனத்திற்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

அடுத்த சீசன் ILT20 லீக் வரும் டிசம்பர் 2 முதல் ஜனவரி 4 வரை நடைபெறவுள்ளது. மொத்தம் 6 அணிகள் இதில் போட்டியிட உள்ளன. மேலும், ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள், ILT20 லீக்கிலும் தங்கள் சொந்த அணிகளை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக ராபின் உத்தப்பா, யூசுப் பதான், அம்பதி ராயுடு உள்ளிட்ட முன்னாள் இந்திய வீரர்கள் இந்த தொடரில் பங்கேற்றிருந்தனர். சாதாரணமாக, இந்திய வீரர்கள் (பிசிசிஐ மற்றும் ஐபிஎல் உடன் தொடர்புடையவர்கள்) வெளிநாட்டு லீக்குகளில் விளையாட அனுமதியில்லை. ஆனால் தற்போது அஸ்வின், இந்திய அணியிலும், ஐபிஎல்லிலும் இருந்து ஓய்வு பெற்றிருப்பதால், சர்வதேச டி20 லீக்கில் அவர் களம் இறங்க உள்ளார்.

Facebook Comments Box