ஆஷஸ் தொடரில் தோல்வி அடைந்தால் ஜோ ரூட்டின் நிலைவும் கோலியைப் போல் பாதிக்கப்படும்: பனேசர் எச்சரிக்கை
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் சேர்த்தவர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்த இடத்தில் உள்ள ஜோ ரூட்டுக்கு, வரவிருக்கும் ஆஷஸ் தொடர் மிகப்பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக அது ஆஸ்திரேலியாவில் நடைபெறுவதால், அவர் மீது அழுத்தம் அதிகமாகியுள்ளது. இதுவரை ஆஸ்திரேலிய மண்ணில் சதம் எடுக்காத ரூட், அங்கு 27 இன்னிங்ஸ்களில் 892 ரன்களையே எடுத்துள்ளார். சராசரி 35.68 தான்.
இந்த நிலையில், ஆஷஸ் தொடரில் ரூட் பூர்த்தியாக விளையாட முடியாவிட்டால், அவரது கிரிக்கெட் வாழ்க்கை சிக்கலில் சிக்கிவிடும் என முன்னாள் இங்கிலாந்து இடதுகை ஸ்பின்னர் மாண்ட்டி பனேசர் எச்சரித்துள்ளார்.
ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:
“அடுத்த ஆண்டு ஜோ ரூட்டின் பயணம் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே அவரது கரியர் திசை தெரியும். அதிலும் அடுத்த மாதம் தொடங்கும் ஆஷஸ் தொடர் மிக முக்கியமானது. விராட் கோலிக்கு என்ன நேர்ந்தது பாருங்கள். ஆஸ்திரேலியாவில் அவருக்குப் பந்தை கையாள முடியாத சிக்கல் வந்தது. அதுவே அவரை ரிட்டையர்மெண்ட் நிலைக்கு தள்ளியது. ரூட்டுக்கும் அதே நிலை உருவாகக் கூடும்.
ஆஷஸ் என்பது சாதாரண தொடர் அல்ல. இங்கு தோற்றால் கேப்டன், பயிற்சியாளர், வீரர்கள் அனைவரையும் கேள்விக்குள்ளாக்குவார்கள். ஆஸ்திரேலிய பந்து வீச்சு மிகவும் வலிமையானது. அதனால் மிகுந்த எச்சரிக்கையுடன் விளையாட வேண்டும். எவ்வளவு சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தாலும் ஆஸ்திரேலியாவில் தான் உண்மையான சோதனை.
தற்போது ரூட் நல்ல பார்மில் உள்ளார். மெல்போர்ன் அல்லது அடிலெய்டு போன்ற பவுன்ஸ் குறைவான பீட்ச்களில் அவர் சதம் எடுக்க வாய்ப்பு உண்டு. ஆனால் அதிக பவுன்ஸ் உள்ள மைதானங்களில் அவருக்கு சிக்கல் தான் ஏற்படும்,” என்று பனேசர் தெரிவித்துள்ளார்.