சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஸ்டார்க் ஓய்வு – டெஸ்ட், ஒருநாள் போட்டிகளில் கவனம்!
ஆஸ்திரேலியாவின் இடதுகை வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க், சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த தகவலை கிரிக்கெட் ஆஸ்திரேலியா உறுதிப்படுத்தியுள்ளது.
35 வயதான ஸ்டார்க், 2012-ஆம் ஆண்டு டி20 சர்வதேச அரங்கில் அறிமுகமானார். இதுவரை 65 போட்டிகளில் பங்கேற்று 79 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையில் ஆஸ்திரேலிய அணிக்காக களம் இறங்கினார். தற்போது, டி20 சர்வதேசத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஸ்டார்க் தெரிவித்துள்ளார்:
“என் வாழ்க்கையில் எப்போதும் டெஸ்ட் கிரிக்கெட்டிற்கே முன்னுரிமை அளிப்பேன். ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடிய ஒவ்வொரு டி20 போட்டியும் இனிய அனுபவம்தான். 2021-ல் உலகக் கோப்பையை வென்றது நினைவில் நிற்கும் சாதனை. எதிர்வரும் ஆஷஸ் தொடர், இந்திய டெஸ்ட் தொடர், மேலும் 2027 ஒருநாள் உலகக் கோப்பை போன்றவற்றில் பங்கேற்கும்படி உடல்நலத்தைக் காக்க விரும்புகிறேன். அதேசமயம் அடுத்த டி20 உலகக் கோப்பைக்கான பந்து வீச்சுத் துறையைத் தயார் செய்யவும் இந்த முடிவு உதவும்” என்றார்.
கடந்த சில ஆண்டுகளில், டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், கிளென் மேக்ஸ்வெல், மார்க்கஸ் ஸ்டாய்னிஸ் ஆகியோர் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர். 2023 உலகக் கோப்பை இறுதி ஆட்டத்துக்கு பின், கேப்டன் பேட் கம்மின்ஸ் வெறும் இரண்டு ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார்.
இந்நிலையில், அனுபவமிக்க வீரர்கள் குறைவாக உள்ள சூழலில், அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ள ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்க இருக்கிறது.