“18 வயதில் ஹரியாணாவுக்காக ஆடவில்லை என்றால் அமெரிக்கா சென்றிருப்பேன்” – ஹர்ஷல் படேல்
ஸ்லோ பந்துகளுக்கு புகழ் பெற்ற ஹர்ஷல் படேல், பிறந்த மண் குஜராத் அணிக்கே மீண்டும் திரும்பியுள்ளார். ஹரியாணா அணிக்காக 14 ஆண்டுகள் விளையாடிய பிறகு, இப்போது தன் சொந்த மாநில அணியில் 2025-26 உள்நாட்டு கிரிக்கெட் சீசனில் பங்கேற்கிறார்.
அகமதாபாத்தில் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் அவர், இனி அவர்களோடு அதிக நேரம் செலவிடும் வாய்ப்பு கிடைத்துவிட்டதாகக் கூறி, தாயகத்திற்குத் திரும்பியதில் பெரும் மகிழ்ச்சி தெரிவித்தார்.
குஜராத் அணிக்காக அவர் ஆடும் முதல் தொடர், முத்தரப்பு போட்டியாகும். இதில் குஜராதின் மற்ற இரண்டு அணிகள் பரோடா, சவுராஷ்டிரா ஆகியவை பங்கேற்கின்றன.
குஜராத்தில் பிறந்த ஹர்ஷல், 2008-09-ம் ஆண்டில் லிஸ்ட்–ஏ போட்டியில் குஜராத்துக்காக அறிமுகமானார். ஆனால், 2010 யு-19 உலகக் கோப்பைக்கு பிறகு ஹரியாணாவுக்கே மாறி விட்டார். 2011-12ல் தான் ஹரியாணா அணிக்காக முதல்தர கிரிக்கெட்டில் களம் இறங்கினார். அதன் பின்பு எல்லா வடிவங்களிலும் அந்த அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்தார்.
74 முதல்தர போட்டிகளில் 246 விக்கெட்டுகளை பிடித்துள்ளார். சராசரி 24 ஆகும். இதில் 12 முறை ஒரு இன்னிங்சில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். ஹரியாணா அணியின் வெள்ளைப் பந்து வெற்றிகளுக்குக் காரணமானவர்களில் ஒருவராக அவர் விளங்கியுள்ளார். குறிப்பாக, 2023-24 விஜய் ஹசாரே டிராபியை வென்ற அணியில் முக்கிய பங்காற்றியவர் ஹர்ஷல்.
தனது மாற்றத்தைப் பற்றி அவர் கூறும்போது,
“2010-11 முதல், என் 19 வயதுக்குட்பட்டோர் கிரிக்கெட் நாட்களிலிருந்தே முழு தொழில்முறை கிரிக்கெட் வாழ்க்கையும் ஹரியாணாவுக்காக அர்ப்பணித்தேன். அந்த அணிக்கு நான் பெரும் நன்றி செலுத்த வேண்டியவன். 18 வயதில் ஹரியாணா சென்றிருக்காவிட்டால், நான் இந்தியாவில் கிரிக்கெட் ஆடியிருக்க மாட்டேன்; அமெரிக்காவுக்கே சென்று விட்டிருப்பேன்.
என் குடும்பத்திலிருந்து நீண்டகாலம் பிரிந்து இருந்தேன். இனி அப்படிச் செய்ய இயலாது. எனவே என் பயணத்தை குஜராத்திலேயே நிறைவு செய்ய முடிவு செய்தேன். அந்த வாய்ப்பு கிடைத்ததில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.
ஐபிஎல் தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக 13 ஆட்டங்களில் 16 விக்கெட்டுகளை எடுத்த சிறப்பான சீசனை அவர் கொண்டாடினார். இந்திய அணிக்காகவும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவாரா என்பதில் தெளிவு இல்லையென அவர் கூறி,
“அதைப் பற்றி அதிகம் யோசிப்பதில்லை. ஒரு நாளைக்கு 10–15 ஓவர்களை வீசும் உடல் வலிமை மற்றும் மனத் தீவிரம் இருக்கிறதா என்பதில்தான் கவனம் செலுத்துகிறேன்” என்று சுருக்கமாக தெரிவித்தார்.