“மீண்டும் தலைதூக்கும் அனகோண்டா” – ஸ்ரீசாந்த்-ஹர்பஜன் வீடியோ விவகாரம் குறித்து அஷ்வின் கண்டனம்

2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரின் போது ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை அறைந்த சம்பவம் அனைவரும் நினைவில் வைத்திருப்பார்கள். ‘ஸ்லாப்கேட்’ என்று அழைக்கப்படும் அந்தச் சம்பவத்தின் வீடியோவை 18 ஆண்டுகள் கழித்து லலித் மோடி – மைக்கேல் கிளார்க் வெளியிட்டதால், மீண்டும் பெரிய சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த வீடியோவை வெளியிட்டதைக் கடுமையாக விமர்சித்துள்ள அஷ்வின், அதனை “மீண்டும் தலை தூக்கும் அனகோண்டா” என்று குறிப்பிட்டுள்ளார். தனது யூடியூப் சேனலில் அவர் கூறியதாவது:

“அனகோண்டாவின் தலை மீண்டும் மீண்டும் மேலெழும்புகிறது. இன்றைய உலகில் எதுவாக இருந்தாலும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு வெளியே வருகிறது. அதனால் இப்படிப்பட்ட சம்பவங்கள் மீண்டும் மீண்டும் வெளிச்சத்திற்கு வரும். ஆனால், இந்த சம்பவம் ஹர்பஜனுக்கும் ஸ்ரீசாந்துக்கும் பெருமை சேர்க்கும் ஒன்றல்ல. அப்படியிருக்கையில் அதை ஏன் மீண்டும் வெளியிட வேண்டும்?

இருவரும் தவறை ஒப்புக்கொண்டு, மன்னிப்பு கேட்டு கடந்து விட்ட விஷயம் இது. ஹர்பஜனே நேரில் வந்து இதற்காக வருந்தினார். தவறு செய்தால் அதனுடன் வாழ வேண்டியது தான். அதை மீண்டும் கிளறிக் காட்டுவதில் எந்த அர்த்தமும் இல்லை. வீட்டிற்குள் கூட நம்மில் பலர் சண்டையிடுவோம்; ஆனால் அது வெளியே வருவதில்லை.

அதனால் முடிந்து போன விஷயத்தில் யாரும் தார்மீக காவலர் போல் நடிக்கக் கூடாது. அந்த இருவரும் அதை கடந்துவிட்டார்கள். மற்றவர்களும் அதைப் போலவே விட வேண்டும்.” என அஷ்வின் கூறினார்.

இதற்கிடையில், அந்த வீடியோவை வெளியிட்டதை ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி கடுமையாக எதிர்த்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பதிவு வெளியிட்ட அவர்,

“ஷேம் ஆன் யூ லலித் மோடி, மைக்கேல் கிளார்க்! உங்கள் பிரசாரத்திற்காக, எப்போதோ முடிந்து போன சம்பவத்தின் வீடியோவை இப்போது வெளியிடுகிறீர்களா? இது மனிதநேயமற்ற, இதயமற்ற செயல். இன்று ஸ்ரீசாந்தும், ஹர்பஜனும் தந்தையாகி, பழைய சம்பவத்தை மறந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பழைய காயத்தைக் கிளறுவது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார்.

அதேபோல், ஹர்பஜன் சிங்கும் இதை கடுமையாக கண்டித்தார்.

“அந்த வீடியோவை வெளியிட்டது மிகப்பெரிய தவறு. யாரும் இப்படிச் செய்யக் கூடாது. மக்கள் ஏற்கனவே மறந்து விட்ட சம்பவத்தை நினைவூட்டுவது தேவையற்றது. நான் அந்த நிகழ்வை நினைத்தாலே தலைகுனிகிறேன். தவறுகள் நடக்கவே செய்யும்; அதை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வரக்கூடாது.” என்று ஹர்பஜன் தெரிவித்தார்.

Facebook Comments Box