ஆசியக் கோப்பை – பனிப்பொழிவால் சேசிங் தான் நல்ல தீர்வு: முன்னாள் கியூரேட்டர் கருத்து

துபாய், அபுதாபியில் நடைபெறவுள்ள ஆசியக் கோப்பை போட்டிகள் தொடர்பாக அங்குள்ள பிட்ச் நிலைமை, பனிப்பொழிவு போன்ற விஷயங்களை முன்னாள் பிட்ச் கியூரேட்டர் டோனி ஹெம்மிங் ஆங்கில ஊடகத்திடம் பகிர்ந்துள்ளார்.

2007 முதல் 2017 வரை துபாய் சர்வதேச ஸ்டேடியம் மற்றும் ஐசிசி அகாடமியின் தலைமை கியூரேட்டராக இருந்த ஹெம்மிங், “துபாய் ஸ்டேடியத்தில் ஏழு பிட்ச்கள் உள்ளன. பாகிஸ்தான் மண்ணைப் பயன்படுத்தி அவை தயாரிக்கப்பட்டது. ஆசியக் கிரிக்கெட்டுக்கு ஏற்ற மாதிரி மண் தேவை என்பதால் இதைத் தேர்ந்தெடுத்தோம். ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் கடும் வெப்பம் இருக்கும். பிறகு இலையுதிர், வசந்த காலங்களில் தூசி புயல் சவால் அதிகம்” என்றார்.

இந்த முறை, கடந்த இரண்டு ஆண்டுகளைவிட பிட்சில் புற்கள் அதிகம் இருப்பதாகவும், அதனால் பந்து வேகமாக எழும்பும் வாய்ப்பு உள்ளதாகவும் அவர் கூறினார். “செப்டம்பரில் ஈரப்பதம் 60–80% வரை இருக்கும். இரவு நேரங்களில் வெப்பம் 38 டிகிரியில் இருந்து 28 டிகிரிக்கு குறையும். இதனால் பனிப்பொழிவு ஏற்படும். பனிப்பொழிவு காரணமாக பந்து, பிட்ச் இரண்டின் தன்மையும் மாறும். அதனால் சேசிங் எளிதாகி விடுகிறது” என்றும் தெரிவித்தார்.

அபுதாபி, துபாய் இரண்டு மைதானங்களிலும் பாகிஸ்தான் மண் பயன்படுத்தப்பட்டாலும் புற்களின் அளவு தான் வித்தியாசம் எனவும் அவர் விளக்கினார். “ஆரம்பத்தில் புதிய பந்தால் நல்ல கேரி இருக்கும். ஆனால் 10 ஓவர்களுக்குப் பிறகு பந்து மென்மையாகி பிட்சில் நின்றுவிடும். அப்போதுதான் பனிப்பொழிவு தாக்கம் அதிகமாகும். அதனால் தான் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிகளுக்கு சுலபமாக இருக்கும்” என்று ஹெம்மிங் கூறினார்.

இதனை ஒப்புக் கொண்ட இந்திய முன்னாள் வீரர் ராபின் சிங், “துபாய், அபுதாபியில் கடும் வெயில் இருக்கும் என்பதால், அங்கு பிட்ச் பகலில் கவர் போடப்படுகிறது. கவர் எடுக்கும்போது புற்களில் ஈரப்பதம் இருக்கும். அதனால் முதலில் பந்து வீசும் அணிக்கு முன்னிலை இருக்கும். பிட்ச் பேட்டிங் பக்கம் சாய்ந்திருந்தாலும், சேசிங் செய்வதே பாதுகாப்பான தேர்வு” என்று கூறினார்.

Facebook Comments Box