ஹாக்கி ஜூனியர் உலகக் கோப்பை – நவம்பர் 29-ல் இந்தியா-பாகிஸ்தான் மோதல்
சர்வதேச ஹாக்கி சம்மேளனத்தின் 14வது ஆண்கள் ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை போட்டி வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 10 வரை சென்னை மற்றும் மதுரையில் நடைபெற உள்ளது. இத்தொடரில் நடத்துநாடான இந்தியா உட்பட 24 அணிகள் பங்கேற்கின்றன.
அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் நான்கு அணிகள் இடம்பெற்றுள்ளன. தற்போதைய சாம்பியன் ஜெர்மனி ‘ஏ’ பிரிவில் உள்ளது. இதே பிரிவில் தென் ஆப்பிரிக்கா, கனடா, அயர்லாந்து அணிகளும் இடம் பெற்றுள்ளன.
இந்தியா ‘பி’ பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. அதே பிரிவில் பாகிஸ்தான், சிலி, சுவிட்சர்லாந்து அணிகளும் உள்ளன. ‘சி’ பிரிவில் அர்ஜென்டினா, நியூஸிலாந்து, ஜப்பான், சீனா இடம் பெற்றுள்ளன. ‘டி’ பிரிவில் ஸ்பெயின், பெல்ஜியம், எகிப்து, நமீபியா உள்ளன. ‘இ’ பிரிவில் நெதர்லாந்து, மலேசியா, இங்கிலாந்து, ஆஸ்திரியா இடம்பெற்றுள்ளன. ‘எஃப்’ பிரிவில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கொரியா, வங்கதேசம் உள்ளன.
லீக் சுற்றில் ஒவ்வொரு அணி தனது பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். அதன் முடிவில் ஒவ்வொரு பிரிவின் முதலிடம் பிடித்த 6 அணிகளும், 2 சிறந்த இரண்டாம் இட அணிகளும் கால் இறுதிக்கு முன்னேறும். கால் இறுதிகள் டிசம்பர் 5-ல் சென்னையில், அரையிறுதி டிசம்பர் 7-ல், இறுதிப்போட்டி டிசம்பர் 10-ல் நடைபெறும்.
போட்டி அட்டவணை வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று அட்டவணையை வெளியிட்டார். சர்வதேச ஹாக்கி சம்மேளனத் தலைவர் யப் இக்ரம், ஹாக்கி இந்தியா தலைவர் திலீப் திர்கே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அட்டவணைப்படி, தொடக்க ஆட்டத்தில் ஜெர்மனி – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன (மதுரையில்). இந்தியா தனது முதல் ஆட்டத்தில் நவம்பர் 28 அன்று சிலியுடன் மோதுகிறது. இது சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் மாலை 5.45க்கு நடக்கிறது. தொடர்ந்து நவம்பர் 29-ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் மோதல் நடக்கிறது. இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் டிசம்பர் 2 அன்று சுவிட்சர்லாந்தை எதிர்கொள்கிறது.
இந்தியா நான்காவது முறையாக ஜூனியர் ஹாக்கி உலகக் கோப்பை நடத்துகிறது. முன்னதாக 2013-ல் டெல்லி, 2016-ல் லக்னோ, 2021-ல் புவனேஷ்வரில் நடத்தியது. இம்முறை அணிகள் 16-இல் இருந்து 24 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசு போட்டி நடத்த ரூ.65 கோடி ஒதுக்கியுள்ளது.
மகளிர் ஆசிய கோப்பை – சூப்பர் 4-க்கு இந்தியா முன்னேற்றம்
சீனாவின் ஹாங்சோவில் நடைபெற்று வரும் மகளிர் ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில் இந்திய அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் சிங்கப்பூரை 12-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்த ஆட்டத்தில் நவ்னீத் கவுர், மும்தாஜ் கான் தலா 3 கோல்கள், நேஹா 2 கோல்கள், லால்ரெம்சியாமி, ஷர்மிளா தேவி, ருதுஜா பிசல் தலா ஒரு கோல் அடித்தனர்.
இந்த வெற்றியால் ‘பி’ பிரிவில் 7 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து இந்தியா சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.