“உடல் எடை காரணம் காட்டி சர்பராஸ் கானை ஒதுக்க வேண்டாம்; அவரை டெஸ்ட் அணியில் சேர்க்க வேண்டும்” – கிறிஸ் கெய்ல்

2025-26 உள்நாட்டு கிரிக்கெட் சீசனும், சர்வதேச போட்டிகளும் இந்தியாவில் தொடங்கவுள்ள நிலையில், தொடர்ந்து புறக்கணிக்கப்படும் சர்பராஸ் கானுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று மேற்கிந்தியத் தீவுகள் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்ல் வலியுறுத்தியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர்-கவாஸ்கர் டிராபி தொடரில், சர்பராஸ் கான் ஐந்து டெஸ்ட்களிலும் பெஞ்சில் அமர்த்தப்பட்டார். தேவ்தத் படிக்கல், துருவ் ஜுரேல் போன்றவர்கள் திடீரென வாய்ப்பைப் பெற்ற நிலையில், உள்நாட்டு கிரிக்கெட்டில் நிலையான சாதனை படைத்த சர்பராஸ் கானை புறக்கணித்தது கிரிக்கெட் அல்லாத காரணங்களால்தான் என விமர்சனங்கள் எழுந்தன. உடல் எடையை காரணம் காட்டியதோடு, பின்னணியில் அரசியல் இருக்கலாம் என்பதையும் பலர் சந்தேகித்தனர்.

இந்தியா ‘ஏ’ அணிக்காக இங்கிலாந்து தொடரில் தேர்வு செய்யப்பட்டும், பின்னர் விலக்கப்பட்டார். சாய் சுதர்ஷன் ஐபிஎல் ஆட்டத்தை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்யப்பட்டார். கருண் நாயரின் விளையாட்டு முறையில் குறைகள் இருந்த போதிலும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முடிவில் இங்கிலாந்து தொடர் 2-2 என முடிந்தது, இதன் மூலம் தேர்வாளர்களின் முடிவுகள் கேள்விக்குள்ளானது.

ஆனால் நிஜத்தில் இந்திய பீச்சுகளில் சாய் சுதர்ஷன், கருண் நாயர் போன்றோருக்கு வாய்ப்பு மிகக் குறைவு. அதற்கு பதிலாக ஸ்ரேயஸ் அய்யர், அபிமன்யு ஈஸ்வரன் போன்றவர்களுக்கு இடம் கிடைக்கலாம். மீண்டும் சர்பராஸ் புறக்கணிக்கப்படுவார் என்பதும் தெளிவாகத் தெரிகிறது. இருந்தாலும், மனம் தளராமல் அவர் தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் கிறிஸ் கெய்ல் தனது நண்பருக்காக குரல் கொடுத்துள்ளார்:

“சர்பராஸ் கான் டெஸ்ட் அணியில் இடம்பெற வேண்டும். குறைந்தது டெஸ்ட் அணியில் ஒரு இடம் அவசியம். சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக அவர் சதம் அடித்தார்; ஆனால் அணியில் இல்லை. சில நாட்களுக்கு முன் அவர் உடல் எடையை குறைத்துவிட்டார் என்ற செய்தியையும் பார்த்தேன்.

ஆனால் உடல் எடை என்பது பிரச்சனை அல்ல. அவர் அப்படியே இருந்தபோதும் பிரச்சனையில்லை. இன்னும் சிறந்த ரன்களை எடுத்து வருகிறார். முதல் தரக் கிரிக்கெட்டில் தொடர்ந்து சதங்களைப் பெற்றவர். இப்படிப்பட்ட வீரரை ஒதுக்க உடல் எடை காரணம் சொல்லுவது அவலமானது. சர்பராஸ் கண்டிப்பாக இந்திய அணியில் இருக்க வேண்டும். இந்தியாவில் பல திறமைகள் உள்ளன, அவருக்கும் தனது திறமையை நிரூபிக்க தொடர்ந்த வாய்ப்பை வழங்க வேண்டும்” என்று கெய்ல் தெரிவித்தார்.

ஆனால் தற்போது இந்தியா ‘ஏ’ அணியிலிருந்தும் சர்பராஸ் நீக்கப்பட்டுள்ளார். “இது என்ன நடக்கிறது? இதற்கு விளக்கம் தர யாரும் முன்வரவில்லை?” என்ற கேள்விகள் கிரிக்கெட் வட்டாரங்களில் கடுமையாக எழுந்து வருகின்றன.

Facebook Comments Box