புச்சி பாபு தொடரில் ஹைதராபாத் சாம்பியன்

சென்னையில் உள்ள சிஎஸ்கே உயர் செயல் திறன் மையத்தில் நடைபெற்ற புச்சி பாபு கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் டிஎன்சிஏ பிரெசிடென்ட் லெவன் – ஹைதராபாத் அணிகள் மோதின.

முதல் இன்னிங்ஸில் ஹைதராபாத் அணி 376 ரன்கள் எடுத்தது. அதற்கு பதிலளித்த டிஎன்சிஏ அணி 353 ரன்களில் அவுட் ஆனது. இதனால் ஹைதராபாத் அணி 23 ரன்கள் முன்னிலை பெற்றது.

நேற்றைய கடைசி நாளில், ஹைதராபாத் அணி 2-வது இன்னிங்ஸில் 70 ஓவர்களில் 5 விக்கெட்களுக்கு 155 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆட்டம் டிரா என அறிவிக்கப்பட்டது. அப்போது வருண் கவுட் 56 ரன்களும், ராகுல் ராதேஷ் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். டிஎன்சிஏ அணிக்காக வித்யுத், ஹெம்சுதேஷன் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.

முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் ஹைதராபாத் அணி சாம்பியன் பட்டம் வென்றது. வெற்றி பெற்ற அணிக்கு டிஎன்சிஏ தலைவர் அசோக் சிகாமணி கோப்பையை வழங்கினார். நிகழ்ச்சியில் கவுரவ பொருளாளர் ஸ்ரீனிவாசராஜ், கவுரவ செயலாளர் ஆர்.ஐ. பழனி, முன்னாள் இந்திய வீரர் ராபின் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Facebook Comments Box