ஆசிய கோப்பை டி20: இன்று இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் மோதல்
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், இன்று இரவு 8 மணிக்கு துபாயில் இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் மோதவிருக்கின்றன.
துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெற்று வரும் இத்தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்றுள்ளன. ‘பி’ பிரிவில் உள்ள சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி, தனது முதல் லீக் ஆட்டத்தை இன்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக ஆடுகிறது. இந்தப் போட்டி, வரும் 14ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுவதற்கு இந்தியாவுக்கு நல்ல பயிற்சியாக அமையலாம்.
பேட்டிங் வரிசையில் ஷுப்மன் கில் மீண்டும் சேர்க்கப்பட்டதால், சஞ்சு சாம்சனின் இடம் சிக்கலாகும் நிலை உள்ளது. தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா – ஷுப்மன் கில் ஜோடி களமிறங்க வாய்ப்புள்ளது. இதனால், மூன்றாவது இடத்தில் திலக் வர்மாவுக்கு வாய்ப்பு அதிகம். சமீபத்தில் அவர் சிறப்பாக விளையாடி வருவதால், சஞ்சுவின் இடம் கேள்விக்குறியாகியுள்ளது. தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் (4), ஹர்திக் பாண்டியா (5), ஷிவம் துபே (6), ஜிதேஷ் சர்மா (7), அக்சர் படேல் (8), பந்துவீச்சில் ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்ரவர்த்தி அல்லது குல்தீப் யாதவ் இடம் பெறுவார்கள்.
ஐக்கிய அரபு அமீரக அணிக்கு, ஜஸ்பிரீத் பும்ரா போன்ற வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வது, அல்லது ஷுப்மன் கிலுக்கு பந்து வீசுவது ஒரு அரிய அனுபவமாக இருக்கும். இந்த ஆசிய கோப்பை, அந்த அணிக்கு உயர்மட்ட போட்டிகளில் தங்களை சோதித்து பார்க்கும் வாய்ப்பாகும்.
கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: “களத்தில் ஆக்ரோஷம் எப்போதும் இருக்க வேண்டும். அது இல்லாமல் விளையாட முடியாது. ஆசிய கோப்பையில் வலுவான அணிகளுக்கு எதிராக விளையாடுவது நமக்கு நல்ல சவால். ஐக்கிய அரபு அமீரக அணி சமீபத்தில் நன்றாக விளையாடி வருகிறது. இந்த தொடரில் அவர்கள் ஆச்சரியப்படுத்தக்கூடும்.”
ஐ.அ.அ பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புத் தெரிவித்ததாவது: “முத்தரப்பு தொடரில் பாகிஸ்தானை எதிர்கொண்டு நெருக்கமான ஆட்டம் விளையாடியுள்ளோம். இந்தியா வலுவான அணி என்பதை நாங்கள் அறிவோம். இருந்தாலும் எளிதில் சரணடைய மாட்டோம்.”
அணிகள்:
இந்தியா – சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ஷுப்மன் கில், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஜிதேஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ், ஜஸ்பிரீத் பும்ரா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா.
ஐக்கிய அரபு அமீரகம் – முஹம்மது வசீம் (கேப்டன்), அலிஷன் ஷரபு, ஆர்யன்ஷ் ஷர்மா, ஆசிப் கான், துருவ் பராஷர், ஈதன் டிசோசா, ஹைதர் அலி, ஹர்ஷித் கவுஷிக், ஜுனைத் சித்திக், மதியுல்லா கான், முஹம்மது ஃபரூக், முஹம்மது ஜவதுல்லா, முஹம்மது ஜோஹைப், ராகுல் சோப்ரா, ரோஹித் கான், சிம்ரன்ஜீத் சிங், சாகிர் கான்.
நேரம்: இரவு 8 மணி
நேரலை: சோனி