ரஞ்சி அணியில் இடம் பிடித்த திருச்சி வீரர் ஹேம்சுதேசன் – 25 ஆண்டுகள் கழித்து சாதனை!

ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தமிழக அணியில், 25 ஆண்டுகளுக்கு பின் திருச்சியைச் சேர்ந்த வீரர் இடம்பிடித்துள்ளார்.

திருச்சி கே.கே.நகர் கிருஷ்ணமூர்த்தி நகர் இ.பி. காலனியைச் சேர்ந்த ஆர். ஜெகநாதன் – ஜெ. பிருந்தா தம்பதிகளின் மகன் ஹேம்சுதேசன் (17). அவர், கே.கே. நகர் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். சிறு வயது முதல் கிரிக்கெட் விளையாடி வந்த ஹேம்சுதேசன், திருச்சி மாவட்ட கிரிக்கெட் சங்க அணியிலும், தமிழக அணியிலும் சிறந்து விளங்கி உள்ளார்.

தற்போது, தமிழக கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ள ரஞ்சி அணியில் கேப்டன் ஜெகதீசன் தலைமையில் ஹேம்சுதேசனும் தேர்வாகியுள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த ஆர்.எம். பெருமாள், புதுக்கோட்டை மன்னர் குடும்பத்தைச் சேர்ந்த ஆர். விஜயரகுநாத தொண்டைமான், எஸ். கல்யாணம், கே. சிவகுமார், எஸ். சந்திரமவுலி, ஆர். சதீஷ் ஆகியோர் முன்பாக ரஞ்சி அணியில் விளையாடியவர்கள். இப்போது 25 ஆண்டுகள் கழித்து ஹேம்சுதேசன் தேர்வாகியிருப்பது திருச்சி கிரிக்கெட் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஹேம்சுதேசன் தெரிவித்ததாவது:

“என்னை இந்த அளவுக்கு வளரச் செய்த என் பயிற்சியாளர்களுக்கும், பெற்றோருக்கும் நன்றி. ரஞ்சி கோப்பையில் சிறப்பாக விளையாடி தமிழக அணிக்கு வலு சேர்க்க வேண்டும் என்பது என் நோக்கம். எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம்பிடித்து, சிறந்த பந்துவீச்சாளர் மற்றும் ஆல்-ரவுண்டராக உருவாக வேண்டும்” என்றார்.

Facebook Comments Box