கார்டிஃப்: மழை காரணமாக பாதிக்கப்பட்ட இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி டக்வொர்த்-லீவிஸ் விதிப்படி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கார்டிஃப் நகரில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஆட்டம் மழை காரணமாக 9 ஓவர்களுக்கு குறைக்கப்பட்டது. முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா அணி, 7.5 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 97 ரன்கள் எடுத்திருந்த போது ஆட்டம் நிறுத்தப்பட்டது. அதிகபட்சமாக கேப்டன் ஏடன் மார்க் ரம் 28, டெவால்ட் பிரேவிஸ் 23, டோனோவன் பெரைரா 25 ரன்கள் எடுத்தனர்.
மழை நிறைந்த பின்னர் ஆட்டம் மீண்டும் தொடங்கப்பட்டது. டக்வொர்த்-லீவிஸ் விதிமுறையில் இலக்கு மாற்றப்பட்ட நிலையில், 5 ஓவர்களில் 69 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலை உருவானது. இங்கிலாந்து பேட்டிங் செய்தது, ஆனால் 5 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 54 ரன்கள் மட்டுமே எடுத்தது. பில் சால்ட் மற்றும் கேப்டன் ஹாரி புரூக் ரன் எதுவும் சேர்க்கவில்லை. ஜாஸ் பட்லர் 11 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரியுடன் 25 ரன்கள் எடுத்தார். ஜேக்கப் பெத்தேல் 7, டாம் பேன்டன் 5 ரன்களில் வெளியேறினர். சேம் கரண் 10, வில் ஜேக்ஸ் ஒரு ரன்னுடன் ஆட்டம் முடித்தனர். கடைசி ஓவரில் இங்கிலாந்து அணிக்கு 26 ரன்கள் தேவையான நிலையில், அவர்கள் 11 ரன்கள் மட்டுமே எடுத்தனர்.
தென் ஆப்பிரிக்கா அணி சார்பில் மார்கோ யான்சன் மற்றும் கார்பின் போஸ் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர். 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தென் ஆப்பிரிக்கா அணி 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் 1-0 முன்னிலையில் உள்ளது. இரண்டாவது ஆட்டம் இன்று இரவு மான்செஸ்டர் நகரில் நடைபெறும்.