ஆசியக் கோப்பை கிரிக்கெட்: இன்று வங்கதேசம்–இலங்கை மோதல்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஆசியக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில், ‘பி’ பிரிவில் உள்ள வங்கதேசம் தனது இரண்டாவது ஆட்டத்தில், 6 முறை கோப்பையை வென்ற இலங்கையுடன் இன்று மோதுகிறது. இந்த போட்டி அபுதாபியில் இரவு 8 மணிக்கு தொடங்குகிறது.

முதல் ஆட்டத்தில் ஹாங் காங் அணியை 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியிருந்த வங்கதேசம், 145 ரன்கள் இலக்கை 14 பந்துகள் மீதமிருக்கும்போதே அடைந்தது. கேப்டன் லிட்டன் தாஸ் 39 பந்துகளில் 59 ரன்கள் சேர்த்து வெற்றிக்குத் துணைநின்றார். தவூஹித் ஹிர்டோயும் 35 ரன்கள் எடுத்து அணிக்கு வலுவான ஆதரவு வழங்கினார். இன்றைய ஆட்டத்திலும் இவர்களிடம் நல்ல ஆட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.

பந்து வீச்சில் தஸ்கின் அகமது, ரிஷாத் ஹோசைன் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை எடுத்திருந்தனர். ஆனால் இணைந்து 8 ஓவர்களில் 59 ரன்களை விட்டுக் கொடுத்தனர். இன்றைய ஆட்டத்தில் அவர்கள் கூடுதல் கவனத்துடன் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களுக்கு முஸ்டாபிஸூர் ரஹ்மான் துணை நிற்பார்.

இதே சமயம், சரித் அசலங்கா தலைமையிலான இலங்கை அணி வலுவான டாப் ஆர்டர், சக்திவாய்ந்த நடுவரிசை மற்றும் சுழற்பந்து வீச்சு திறமையுடன் களம் இறங்குகிறது. இந்த ஆட்டம் இலங்கையின் முதல் போட்டி. பதும் நிசங்கா, குசால் மெண்டிஸ், குசால் பெரைரா ஆகியோர் டாப் ஆர்டரில் வலுப்பெற செய்கிறார்கள். நடுவரிசையில் சரித் அசலங்கா, தசன் சனகா, கமிந்து மெண்டிஸ் ஆகியோர் முக்கிய பங்கு வகிக்கிறார்கள்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பியுள்ள ஜனித் லியனகேவும் அணிக்கு பலம் சேர்க்கிறார். 30 வயதான அவர் சமீபத்தில் ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 70 ரன்கள் விளாசியிருந்தார்.

வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர்களாக சனகா, சமிகா கருணரத்னே ஆகியோர் பங்களிக்கிறார்கள். சுழற்பந்து வீச்சில் வனிந்து ஹசரங்கா, தீக் ஷனா, துனித் வெல்லாலகே ஆகியோர் வங்கதேச பேட்டிங்கிற்கு சவால் விடுக்கக்கூடும். அதேபோல் வேகப்பந்து வீச்சில் மதீஷா பதிரனா அழுத்தம் கொடுக்கத் தயாராக உள்ளார்.

Facebook Comments Box