பிள்ளைகள் தேசத்திற்காக விளையாட வேண்டும் என பெற்றோர் ஆசைப்பட வேண்டும் – கபில் தேவ்

“பிள்ளைகள் கிரிக்கெட்டில் நாட்டுக்காக விளையாட வேண்டும் என பெற்றோர்கள் விரும்ப வேண்டும். ஆனால், ஐபிஎல் மட்டுமே போதும் என எண்ணுவது எனக்கு விருப்பமில்லை” என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

‘தி இந்து’ குழுமத்தின் ஸ்போர்ட்ஸ்டார் PlayCom 2025 நிகழ்வில் சனிக்கிழமை கலந்து கொண்ட அவர், டி20 லீக், தோனி–ரோஹித் ஒப்பீடு உள்ளிட்ட விஷயங்களைப் பற்றி பேசியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:

“இன்றைய பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஊக்கமளிக்கிறார்கள். ஆனால் எங்கள் காலத்தில் அது சாத்தியமே இல்லை; கிரிக்கெட் விளையாடினால் பெற்றோர்கள் கண்டிப்பார்கள்.

இப்போது பெற்றோர்களே பிள்ளைகளை மைதானத்திற்கு அழைத்து வருகின்றனர். அதை பார்க்கும் போது மகிழ்ச்சி தருகிறது. ஆனால், அவர்கள் குழந்தைகள் தேசத்திற்காக விளையாட வேண்டும் என நினைக்க வேண்டும். வெறும் ஐபிஎல் விளையாடினால் போதுமானது என்கிற எண்ணமே எனக்கு எரிச்சலை தருகிறது. குறிக்கோள் தேச சேவையாக இருக்க வேண்டும். கிளப் அணிக்காக விளையாடினாலும் இறுதியில் நாட்டுக்காக விளையாடுவதுதான் உயர்ந்த சாதனை.

நாங்கள் விளையாடிய காலத்தில் 50 ஓவர்களில் 100 ரன் அடிக்கவே சிரமப்பட்டோம். ஆனால், இன்று டி20 சர்வதேச போட்டிகளில் 300 ரன்களை அடிக்கிறார்கள். அது உண்மையில் பெருமை தருகிறது. இந்த தலைமுறை வீரர்களை பாராட்ட வேண்டும்.

ஓய்வு பெற்றவர்கள் பிற லீக் போட்டிகளில் விளையாடுவது அவர்களது தனிப்பட்ட முடிவு; அதில் எந்த குறையும் இல்லை. அவர்கள் ஏற்கனவே இந்திய அணிக்காக தங்களை நிரூபித்தவர்கள்.”

தோனி–ரோஹித் கேப்டன்சி குறித்து கேட்டபோது, கபில் தேவ் கூறியதாவது:

“இருவரும் இந்தியாவுக்காக டி20 உலகக் கோப்பையை வென்றவர்கள். தோனி 2007-லும், ரோஹித் 2024-லும் வெற்றியடைந்தனர். மேலும், தோனி தலைமையில் இந்தியா 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபியும் வென்றது. ரோஹித்தும் சாம்பியன்ஸ் டிராபியை இந்தியாவுக்கு வென்று கொடுத்துள்ளார்.

தோனி ஒரு சிறந்த தலைவர். அவர் அணியின் நிலைமைகளை நுணுக்கமாக மதிப்பிடுவார். விக்கெட் கீப்பராக இருப்பதால் ஒவ்வொரு பந்தையும் கவனிப்பார்; சூழ்நிலையை புரிந்து கொண்டு அணியை இறுதி வரை அழைத்து செல்வார். அவர் சிறந்த வழிநடத்தல் திறன் கொண்டவர் என்று நான் கருதுகிறேன்.”

Facebook Comments Box