சத்தமின்றி பதிலடி கொடுத்த சூர்யகுமார் யாதவ் படை!

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் நேற்று முன்தினம் துபாயில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதின. எப்போதுமே இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று முன்தினம் நடந்த ஆட்டமும், அதில் நிகழ்ந்த சில சம்பவங்களும் எதிர்பாராத விதத்தில் இருந்தன.

பஹல்காம் தாக்குதலின் தாக்கம் வெளிப்படையாக தெரிந்தது. இரு அணிகளின் வீரர்கள் களத்துக்கு வந்தபோது பேசவில்லை, வழக்கமான கை குலுக்கலும் இல்லை. கடந்த ஏப்ரல் 22-ம் தேதி நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலில் 26 பேர் இறந்தனர். தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்தது. ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா பதிலடி கொடுத்த பின்னர் போர் நிறுத்தம் ஏற்பட்டது.

இந்த சம்பவத்துக்குப் பிறகு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் நேற்று முன்தினம் முதல் முறையாக கிரிக்கெட் போட்டியில் விளையாடின. இந்த ஆட்டத்தில் 128 ரன்கள் இலக்கை விரட்டிய இந்திய அணி 15.5-வது ஓவரில் சூர்யகுமார் யாதவ் விளாசிய சிக்ஸருடன் 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சிக்ஸர் விளாசி வெற்றி பெற்ற அடுத்த நொடியில் மறுமுனையில் நின்ற ஷிவம் துபேவை அழைத்துச் கொண்டு நேரடியாக இந்திய அணியின் ஓய்வு அறைக்குச் சென்றார் சூர்யகுமார் யாதவ்.

வழக்கமாக கிரிக்கெட் போட்டியில் வெற்றி உடன் எதிரணி வீரர்களுடன் கை குலுக்குவது நடைமுறை. ஆனால் களத்தில் இருந்த பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்காமலே திரும்பிச் சென்றார் சூர்யகுமார் யாதவ். இந்திய அணியின் பயிற்சி குழுவும் போட்டி முடிந்த பிறகு களத்துக்கு வராமல் ஓய்வறையிலேயே இருந்தனர். பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா சக வீரர்களுடன் வழக்கமான கைகுலுக்கலுக்காக வரிசையில் நின்றார். மேலும் இந்திய வீரர்கள் அமர்ந்திருந்த இடத்தை நோக்கி பாதி தூரம் நடந்தாலும், இந்திய அணி தரப்பில் இருந்து பதிலளிக்கவில்லை.

இரு அணிகளுக்கு இடையிலான இறுக்கம் டாஸ் போடும் போதே வெளிப்பட்டது. பாகிஸ்தான் டாஸ் வென்ற போது கேப்டன் சல்மான் ஆகாவுடன் சூர்யகுமார் கை குலுக்கவில்லை. நேருக்கு நேர் பார்த்துக்கொள்ளாமலும், அணி விவரங்கள் பட்டியலையும் கேப்டன்கள் பரஸ்பரம் மாற்றிக் கொள்ளாமலும் நடந்தது. மாறாக இருவரும் போட்டி ரெஃப்ரீ ஆண்டி பைக்ராஃப்டிடம் வழங்கிச் சென்றனர்.

ஒட்டுமொத்தமாக இந்திய அணி அமைதியான முறையில் பதிலடி கொடுத்தது போல ஆட்டம் நடந்தது. போட்டி நடைபெற்ற மைதானத்தில் பல்வேறு பகுதிகளில் காலி இருக்கைகள் காணப்பட்டன. 35 ஓவர்களில் இரு நாட்டு வீரர்கள் ஒருமுறை கூட பேசிக்கொள்ளவில்லை. வார்த்தை போர்களும், சைகைகளும் இடம் பெறவில்லை.

போட்டிக்குப் பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறினார், “நாங்கள் அரசாங்கத்துடனும் பிசிசிஐயுடனும் இணைந்துள்ளோம். அணியாக நாங்கள் ஒரு முடிவை எடுத்தோம். நாங்கள் இங்கு விளையாடுவதற்காக மட்டுமே வந்திருக்கிறோம். அவர்களுக்கு பதில் அளித்திருக்கிறோம். இது சிறந்த உணர்வு. நாட்டுக்கு சிறந்த முறையில் ‘ரிட்டர்ன் கிஃப்ட்’ கொடுத்துள்ளோம்.

விளையாட்டு வீரராக வாழ்க்கையில் சில விஷயங்களை விளையாட்டு மரபைவிட முதன்மையாகக் கருத வேண்டும். பஹல்காமில் தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்துடன் நாங்கள் இருக்கிறோம். போட்டியின் வெற்றியை ஆபரேஷன் சிந்தூரில் ஈடுபட்ட ஆயுதப்படை வீரர்களுக்கு அர்ப்பணிக்கிறோம்” என்றார்.

எதற்காக இந்த முடிவு?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் முழுவதும் பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்க கூடாது என்ற முடிவை இந்திய அணி நிர்வாகம் எடுத்திருக்கும் என கருதப்படுகிறது. இதற்கு பஹல்காம் தாக்குதல் மற்றும் எதிர்ப்பு காரணமாக இருக்கலாம்.

பிசிசிஐ-யும் இதற்கு ஒப்புதல் வழங்கியிருக்கலாம். நடப்பு தொடரில் வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா, பாகிஸ்தான் மீண்டும் மோத உள்ளனர். 28-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியிலும் பதிலடி தொடரும் வாய்ப்பு உள்ளது.

எதிர்ப்புகளை மீறி விளையாடுவது ஏன்?

பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா விளையாட அரசும் பிசிசிஐயும் அனுமதித்ததால் பல தரப்பில் கண்டனம் எழுந்தது. எதிர்ப்புகளை மீறி இந்திய அணி விளையாடுவதற்குப் பின்னணி காரணம் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டது. மேலும் 2030 காமன்வெல்த் மற்றும் 2036 ஒலிம்பிக் போட்டிகளிலும் இந்தியா நடத்த விரும்புகிறது.

பெரிய போட்டிகளை நடத்தும் நிலையில், பாகிஸ்தான் இல்லாத போட்டி சர்வதேச ஒலிம்பிக் கமிட்டிக்கு பாதிப்பாகும். இதை கருத்தில் கொண்டு இந்திய அணி ஐசிசி மற்றும் ஆசிய அளவிலான போட்டிகளிலும் பாகிஸ்தானுடன் விளையாடுகிறது.

‘இது புதிதல்ல’

சர்வதேச விளையாட்டுகளில் அரசியல் காரணமாக கைகுலுக்காமை புதியது அல்ல. 2023 விம்பிள்டன் டென்னிஸில் உக்ரைனின் எலினா ஸ்விட்டோலினா பெலாரஸ் வீராங்கனைக்கு எதிராக வெற்றி பெற்ற போதிலும் கைகுலுக்க மறுத்து விலகினார்.

‘விதிமுறையில் இல்லை’

பிசிசிஐ மூத்த அதிகாரி கூறினார், “விதிமுறை புத்தகத்தில் எதிர் அணியுடன் கைகுலுக்க விவரம் இல்லை. இது நல்லெண்ண சைகை, மரபு மட்டுமே. சட்டம் அல்ல. ஆகவே பதற்றமான அணியுடன் கைகுலுக்க கட்டாயம் இல்லை.”

பாக். கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் கைகுலுக்காமல் சென்றது விவாதப்பொருள். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஆசிய கிரிக்கெட் கவுன்சிலிடம் ஆண்டி பைக்ராஃப்ட்டை நீக்க வேண்டும் என புகார் அளித்தது.

தற்போது ஐசிசி தலையிட நிலை உருவாகி உள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மோஷின் நக்வி, ஐசிசி தலைவராக இந்தியாவின் ஜெய் ஷா உள்ளனர்.

பரிசளிப்பு விழா

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் அறிக்கைக்கு பிசிசிஐ பதிலளிக்கவில்லை. செப்டம்பர் 28 இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு மோஷின் நக்வி கோப்பை வழங்குவார். இந்திய அணி வெற்றியாளராக இருந்தால் நிகழ்வு பார்க்க கிரிக்கெட் வட்டாரங்கள் தயாராகிவிட்டனர்.

Facebook Comments Box