ஆசியக் கோப்பை கிரிக்கெட்: ‘சூப்பர் 4’ சுற்றுக்கு இந்தியா முன்னேற்றம்
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அடுத்த கட்டமான ‘சூப்பர் 4’ சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. திங்கட்கிழமை நடைபெற்ற குரூப் லீக் ஆட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகம் ஓமன் அணியை வீழ்த்தியதால், இந்தியாவின் அடுத்த சுற்று நிச்சயமானது.
செப்டம்பர் 9ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கிய இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. ‘ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம்பிடித்துள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் ‘ஏ’ குழுவில் முதலிடத்தில் உள்ளது. இந்தியாவின் நெட் ரன் ரேட்டும் +4.793 ஆக உயர்வாக உள்ளது.
குழு சுற்றில் முதலிரு இடங்களை பிடிக்கும் அணிகள்தான் ‘சூப்பர் 4’க்கு முன்னேறும். இந்த நிலையில், ஓமன் அணி 2 போட்டிகளிலும் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது. இந்தியா அடுத்த சுற்றை எட்டியுள்ளது.
இப்போது ‘ஏ’ குழுவில் இருந்து பாகிஸ்தான் அல்லது ஐக்கிய அரபு அமீரகத்தில் யார் வெல்வார்களோ அவர்கள் மட்டுமே அடுத்த கட்டத்தை அடைவார்கள். இரு அணிகளும் வரும் 17ஆம் தேதி மோதுகின்றன. இந்தியா தனது அடுத்த லீக் ஆட்டத்தை ஓமன் அணியுடன் செப்டம்பர் 19ஆம் தேதி ஆடுகிறது. ‘சூப்பர் 4’ சுற்று செப்டம்பர் 20ஆம் தேதி முதல் துவங்குகிறது.